சபரிமலையில் சாமி தரிசனத்துக்கு சென்ற ஆந்திர இளம்பெண்கள் 4 பேரை போலீசார் திருப்பி அனுப்பினர்

சபரிமலையில் சாமி தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

Update: 2019-02-15 22:00 GMT
பத்தனம்திட்டா,

கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலையில் அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 10 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவது இல்லை. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து தற்போது அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்ற நிலை உருவாகி உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் அய்யப்ப பக்தர்களும், பல்வேறு இந்து அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. ஏற்கனவே பிந்து, கனகதுர்கா ஆகிய 2 இளம்பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

தற்போது மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 4 இளம்பெண்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

சபரிமலையில் இளம்பெண்கள் சாமி தரிசனத்துக்கு செல்ல எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டம் நடத்துவதால் அங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அவர்களிடம் எடுத்து கூறினார்கள். போலீசாரின் அறிவுரையை ஏற்று அந்த 4 இளம்பெண்களும் திரும்பிச் சென்றனர்.

மேலும் செய்திகள்