காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷியா, தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Update: 2019-02-15 22:45 GMT
புதுடெல்லி,

அமெரிக்கா, ரஷியா

காஷ்மீர் மாநிலம் புலவாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் துணை ராணுவப்படையினர் பலியானார்கள். இதற்கு வெளிநாட்டு தலைவர்கள் ஏராளமானோர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அனுப்பி உள்ள செய்தியில், “இந்த கொடூர குற்றச்செயலை வன்மையாக கண்டிக்கிறோம். தாக்குதலில் ஈடுபட்டவர்களும், தூண்டி விட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். இதற்காக இந்தியாவுக்கு ஒத்துழைப்பு தர தயாராக இருக்கிறோம். இந்தியாவுடன் துக்கத்தை பகிர்ந்து கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

சீனா கடும் அதிர்ச்சி அடைந்ததாக அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி கெங் சுவாங் கூறியுள்ளார். தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமாபோசா கூறுகையில், “இந்திய மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். சமுதாயத்தில் பயங்கரவாத செயலுக்கு இடமில்லை. பயங்கரவாதத்தை முறியடிக்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கு துணை நிற்போம்” என்றார்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறுகையில், “தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம். என் நண்பர் பிரதமர் மோடி மற்றும் இந்திய மக்களுடன் எப்போதும் என் சிந்தனை இருக்கும்” என்றார்.

பிரான்ஸ் மந்திரி ஜீன் யெவஸ் லி டிரியன் கண்டனம் தெரிவித்துள்ளார். நேபாளம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பயங்கரவாத செயல்களை யாரும் நியாயப்படுத்த முடியாது” என்று கூறியுள்ளது.

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, “பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயல்படுவோம்” என்று கூறியுள்ளார்.

இலங்கை

இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சி தலைவர் ராஜபக்சே ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

எந்தவகையான பயங்கரவாத தாக்குதலையும் பூடான் கண்டிப்பதாக அந்நாட்டு பிரதமர் லோடே ஷெரிங் கூறியுள்ளார்.

கனடா வெளியுறவுத்துறை மந்திரி கிறிஸ்டியா பிரீலேண்ட் கூறுகையில், “பயங்கரவாதம் எந்த வடிவத்தில் வந்தாலும் அதை தோற்கடிப்பதற்கான போராட்டத்தில் இந்தியாவுடன் துணை நிற்போம்” என்றார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகளாவிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள பயங்கரவாதத்தை எதிர்க்கும் முயற்சிகளை சர்வதேச சமூகம் ஒருங்கிணைக்க வேண்டும்” என்றார்.

சவுதி அரேபியா

சவுதி அரேபிய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலை நாங்கள் நிராகரிக்கிறோம். பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் நட்பு நாடான இந்தியாவுடன் சேர்ந்து இருப்போம்” என்று கூறப்பட்டுள்ளது.

பஹ்ரைன் நாட்டு அரசு, “பயங்கரவாதம் எந்த வடிவத்தில் இருந்தாலும், அதை நிராகரிப்போம். இந்த போராட்டத்தில் இந்தியாவுக்கு உறுதுணையாக இருப்போம்” என்று கூறியுள்ளது.

மேலும் செய்திகள்