மிக மோசமான தாக்குதலை பாகிஸ்தான் ஆதரவுடன் பயங்கரவாதிகள் நடத்தி உள்ளனர் “பயங்கரவாதிகளுக்கு சரியான பாடம் புகட்டப்படும்” - பிரதமர் மோடி

மிக மோசமான தாக்குதலை பாகிஸ்தான் ஆதரவுடன் பயங்கரவாதிகள் நடத்தி உள்ளனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2019-02-17 10:27 GMT
பாட்னா,

பீகார் மாநிலம் பரானி மாவட்டத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையை நவீனமயமாக்கி, விரிவாக்கம் செய்யும் திட்டம் மற்றும் பாட்னா நகருக்கான புதிய மெட்ரோ ரெயில் சேவை திட்டம் உள்பட சுமார் 33 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.

ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியை பாட்னாவுடன் இணைக்கும் வகையில் மின்மயமாக்கப்பட்ட ரெயில் பாதையை தொடங்கி வைத்ததுடன் இந்த வழித்தடத்தில் ராஞ்சி-பாட்னா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் குமார் சின்ஹா, ரத்தன் குமார் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மிக மோசமான தாக்குதலை பாகிஸ்தான் ஆதரவுடன் பயங்கரவாதிகள் நடத்தி உள்ளனர். புல்வாமா தாக்குததால் உங்கள் நெஞ்சில் கொந்தளிக்கும் நெருப்பு என்னுடைய இதயத்திலும் எரிந்து கொண்டிருக்கிறது. பயங்கரவாதிகளுக்கு சரியான பாடம் புகட்டப்படும்.

இன்று தொடங்கி வைக்கப்பட்ட பல்வேறு திட்டங்களின் ஒன்றான குழாய் மூலம் எரிவாயு வழங்கும் ‘உஜ்ரா கங்கா யோஜானா’ திட்டத்தின் மூலம் பீகார் மட்டுமின்றி அருகாமையில் உள்ள ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா ஆகிய மாநிலங்களும் சிறப்பான வளர்ச்சியை பெறும் என மோடி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் மற்றும் மத்திய, மாநில மந்திரிகள் பங்கேற்றனர்.

நேற்று  நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய பிரதமர் மோடி ‘காஷ்மீரில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள் மிக மோசமான செயலைச் செய்து விட்டார்கள். நாடு முழுவதுமே கடும் சோகத்தால் மக்கள் ஆழ்ந்துள்ளனர். வீரர்களின் தியாகம் வீண் போகாது. ராணுவத்துக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் தலைவிதி இனிமேல் ராணுவத்தால் தீர்மானிக்கப்படும்’’ எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்