ரயிலில் அடிபட்டு கிடந்தவரை மீட்டு 1.5 கி.மீட்டர் தோளில் சுமந்து சென்ற போலீஸ் !

ரயிலில் அடிபட்டு கிடந்தவரை தோளில் சுமந்து சென்று மருத்துவமனையில் அனுமதித்த போலீஸ் கான்ஸ்டபிளின் செயல் பாராட்டை பெற்றுள்ளது.

Update: 2019-02-24 04:15 GMT
ஹோஷங்காபாத்,

மத்திய பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத் மாவட்டம் அருகே நேற்று விரைவு ரயில் சென்று கொண்டிருந்தபோது அதில் பயணித்து கொண்டிருந்த ஒருவர் தவறி கீழே விழுந்தார். இந்த விபத்தில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் கை, கால்களில் இருந்து இரத்தம் வழிய, வலியால் துடித்து கொண்டிருந்தார். அங்கிருந்தவர்கள் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு   போலீஸ் கான்ஸ்டபிள் பூனாம்சந்த் பில்லூர் விரைந்து வந்தார். விபத்து நடைபெற்ற இடத்திற்கு வாகனம் எதுவும் வர முடியாத சூழல் இருந்ததால், அடிபட்டு கிடந்த பயணியை தனது தோளில் தூக்கி கொண்டு ஓடத்துவங்கினார். சுமார் 1.5 கி.மீட்டர் தூரத்திற்கு தனது தோளில் சுமந்தபடி அடிபட்டு கிடந்த பயணியை ரயில்வே நிலையத்திற்கு கொண்டு சென்றார். அங்கிருந்து வாகனம் மூலமாக அந்தப்பயணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

சுமார் 1.5 கி.மீட்டர்,  அடிபட்டு கிடந்த பயணியை தோளில் தூக்கி கொண்டு போலீஸ் ஓடிய காட்சிகள், சமூக வலைதளங்களில் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்