கேரள வெள்ள பாதிப்பு; ஈத் பண்டிகைக்கான புது துணிகளை நன்கொடையாக வழங்கிய கடைக்காரர்

கேரளாவில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு ஈத் பண்டிகை விற்பனைக்கு வைத்திருந்த புது துணிகளை துணிக்கடைக்காரர் ஒருவர் கொடுத்து உதவியுள்ளார்.

Update: 2019-08-13 10:56 GMT
கொச்சி,

கேரளாவில் பருவமழை தொடங்கி தொடர்ந்து பெய்து வருகிறது.  இதில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு பரவலாக கனமழை பெய்து வருகிறது.  இதனால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன.  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி போயுள்ளது.

இங்கு இதுவரை கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவங்களில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது.  பலர் வீடுகளை இழந்துள்ளனர்.  2.87 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

காணாமல் போன 58 பேரில் 50 பேர் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர்கள்.  இந்த பகுதியில் 24 பேர் பலியாகி உள்ளனர்.  இது கேரளாவில் மிக அதிக எண்ணிக்கையாகும்.

இதேபோன்று கடும் மழை பொழிவினால் ரெயில் சேவை பாதிப்படைந்து உள்ளது.  கேரள பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் ஆகஸ்டு 23ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.

கேரளாவின் கொச்சி நகரில் துணி விற்பனை செய்து வருபவர் நவுசாத்.  இவர் ஈத் பண்டிகைக்காக புது துணிகளை வாங்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார்.  இதனிடையே, தன்னிடம் உள்ள புது துணிகளை வெள்ளம் பாதித்த அப்பகுதி மக்களுக்கு அவர் நன்கொடையாக வழங்கி உள்ளார்.

இதுபற்றிய வீடியோ வைரலாக பரவியது.  அவர் கூறும்பொழுது, மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பது எனது நோக்கம்.  கடவுளின் அருளால் வீடியோ வைரலாகி உள்ளது.

துபாயில் இருந்து சிலர் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஈத் பண்டிகைக்கான எங்களது கொண்டாட்ட திட்டங்களை நாங்கள் மாற்றியுள்ளோம் என கூறினர்.  கேரள வெள்ள நிவாரணத்திற்கு அந்த நிதியை அவர்கள் வழங்கி உள்ளனர் என்று நவுசாத் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்