உ.பி.யில் மதிய உணவு ஊழல் அம்பலம் ; பள்ளி ஊட்டச்சத்து உணவை காசுக்கு விற்கும் அவலம்!

உத்தரபிரதேசத்தில் சத்துணவு ஊழியர்கள் பள்ளி மதிய உணவுகளை காசுக்காக விற்பனை செய்வது வெட்டவெளிச்சமானது.

Update: 2019-09-18 06:53 GMT
ரேபரேலி,

உத்தரபிரதேசம் ரேபரேலி மாவட்டம் சலோன் தொகுதியில் உள்ள ஒரு விலங்குத் தீவன குடோனில் பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய ஊட்டச்சத்து உணவுகள் அடங்கிய சாக்கு மூட்டைகள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. அதிகாரிகள் சோதனையிட்ட குடோனில்  155 சாக்கு மூட்டைகள் பதுக்கப்பட்டு இருந்தது.  

கைப்பற்றப்பட்ட மொத்த உணவுகள் அடங்கிய சாக்கு மூட்டைகளின் எடை 9,300 கிலோ என்று கண்டறியப்பட்டது. இதனை அடுத்து, உத்தரபிரதேச அரசு ரேபரேலி மற்றும் கன்னோஜ் ஆகிய மாவட்டங்களில் நடந்த மதிய ஊட்டச்சத்து உணவு முறைகேடுக்காக 28 சத்துணவு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உடனடி நடவடிக்கையாக 17 அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இது தவிர, மேலும் நான்கு மேற்பார்வையாளர்கள் மற்றும் தலைமை ஊழியர்களை பணி இடைநீக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடோன் ஆபரேட்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

முதற்கட்ட விசாரணையின் போது, அங்கன்வாடி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்களுக்கு சட்டவிரோதமாக ஊட்டச்சத்து உணவுகள் விற்கப்பட்டது அம்பலமானது.

மாவட்டத்தின் டி.பி.ஓ. அதிகாரியான பவன் யாதவ் மீது பணியில் அலட்சியம் காட்டியதற்காக குற்றப்பத்திரிகை பிறப்பிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்