நெஞ்சு வலி காரணமாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் ஆஸ்பத்திரியில் அனுமதி - மராட்டிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியவர்

நெஞ்சு வலி காரணமாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Update: 2019-11-11 11:39 GMT
மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தல் முடிவு வெளியான நாள் முதல் சிவசேனாவை சேர்ந்தவர் தான் அடுத்த முதல்-மந்திரியாக இருப்பார் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் சஞ்சய் ராவத். ராஜ்யசபா எம்.பி.யாக உள்ள அவர், சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் ஆசிரியராகவும் உள்ளார். மராட்டியத்தில் நிகழ்ந்து வரும் அரசியல் மாற்றங்களுக்கு சஞ்சய் ராவத் தான் முக்கிய காரணம் என கூறப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்று மதியம் சஞ்சய் ராவத்துக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக அவர் மும்பை மாகிம் பகுதியில் உள்ள லீலாவதி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து டாக்டர் ஒருவர் கூறுகையில், ‘லேசான நெஞ்சு வலி காரணமாக சஞ்சய் ராவத் ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். 2 நாட்களுக்கு முன்பு கூட அவர் ஆஸ்பத்திரி வந்து உடல் பரிசோதனை செய்தார். அப்போது, அவருக்கு இ.சி.ஜி. சோதனை செய்யப்பட்டது.

அதன்பிறகு இன்று (நேற்று) ஆஸ்பத்திரிக்கு வருமாறு டாக்டர்கள் அவரிடம் கூறியிருந்தனர். இதைத்தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சஞ்சய் ராவத் நாளை(இன்று) ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்புவார். அவருக்கு ஆஞ்சியோகிராபி சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டுமா? என்பது குறித்து டாக்டர்கள் முடிவு செய்வார்கள்’ என்றார்.

மேலும் செய்திகள்