கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

Update: 2020-02-14 21:30 GMT
புதுடெல்லி,

சிவகங்கை தொகுதி எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் மீது ஏர்செல்-மேக்சிஸ், ஐ.என்.எக்ஸ் மீடியா உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள இந்த வழக்குகளில், கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் டென்னிஸ் போட்டிகளில் பார்வையாளராக பங்கேற்க பிப்ரவரி 14-ந் தேதியில் இருந்து 28-ந்தேதி வரை இங்கிலாந்து, பிரான்சு ஆகிய நாடுகளுக்கு செல்வதற்காக அனுமதி கோரி சுப்ரீம் கோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார்.

அனுமதி

இந்த மனு, நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூரியகாந்த் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும் கார்த்தி சிதம்பரம் அனுமதி கோரியுள்ள நாடுகளுக்கு பிப்ரவரி 14-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை செல்வதற்கு அனுமதிப்பதாக கூறிய நீதிபதிகள், சென்ற முறை அவர் வெளிநாடு சென்றபோது விதிக்கப்பட்ட அதே நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்படுவதாக தெரிவித்தனர்.

நிபந்தனைகள்

கார்த்தி சிதம்பரம் கடந்த ஆண்டு இருமுறை வெளிநாடு பயணங்கள் மேற்கொண்டபோது ஒவ்வொரு முறையும் அவர் ரூ.10 கோடியை சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் அலுவலகத்தில் நிபந்தனை தொகையாக செலுத்த வேண்டும் என்றும், அவர் அயல்நாட்டு பயணங்களை முடித்து நாடு திரும்பி அவர் தொடர்பான விசாரணைகளில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.

கார்த்தி சிதம்பரம் தனது வெளிநாட்டு பயணங்களுக்காக கோர்ட்டில் செலுத்திய ரூ.20 கோடியை திருப்பித் தருமாறு தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, கடந்த ஜனவரி மாதம் அவருக்கு அந்த தொகையை திருப்பி அளித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்