மனிதஇன நலனுக்கான விவகாரத்தில் அரசியல் செய்ய பாகிஸ்தான் முயற்சி; இந்தியா கடும் குற்றச்சாட்டு

மனிதஇன நலனுக்கான ஆலோசனை கூட்டத்தில் அரசியல் செய்ய பாகிஸ்தான் முயற்சிக்கிறது என இந்தியா கடுமையான குற்றச்சாட்டு கூறியுள்ளது.

Update: 2020-03-15 16:30 GMT
புதுடெல்லி,

சீனாவில் தோன்றி உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பினை எதிர்கொள்வது எப்படி? என்று சார்க் நாடுகள் சார்பில் அவசர ஆலோசனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.  இந்த கூட்டத்தில் சார்க் நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.  ஆனால் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கலந்து கொள்ளவில்லை.

அவருக்கு பதில் கலந்து கொண்ட அந்நாட்டு சுகாதார மந்திரி ஜாபர் மிர்சா காஷ்மீர் விவகாரம் பற்றி பேசி சர்ச்சை ஏற்படுத்தினார்.

அவர் கூறும்பொழுது, ஜம்மு மற்றும் காஷ்மீரில் கொரோனா வைரஸ் உள்ளது என வந்துள்ள தகவல் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.  அதனால் சுகாதார நெருக்கடிநிலையை கவனத்தில் கொண்டு, அந்த பகுதியில் விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் உடனடியாக நீக்கப்பட வேண்டியது அவசியம் என கூறி சர்ச்சையை எழுப்பினார்.

இதுபற்றி இந்திய அரசாங்கம் தரப்பில் கூறும்பொழுது, சார்க் நாடுகளின் தலைவர்கள் அடங்கிய ஆலோசனை கூட்டத்தில் பாகிஸ்தான் அரசு சுகாதார மந்திரியை அனுப்பி வைத்துள்ளது.  இது ஒரு பண்பாடற்ற அணுகுமுறை.

மனிதஇனத்தின் நலனுக்கான விவகாரத்தில் அரசியல் செய்ய பாகிஸ்தான் முயற்சிக்கிறது.  நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒளி கூட சிகிச்சை முடிந்து திரும்பிய மறுநாளில் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தவிர சார்க் நாடுகளின் ஒவ்வொரு தலைவரும் கலந்து கொண்டுள்ளார்.

ஓர் அவசரநிலை ஏற்பட்ட சூழலில் அதனை எதிர்கொள்ள சார்க் நாடுகளின் தலைவர்கள் ஒன்றாக கூடியுள்ளனர்.  இதற்கடுத்து, வேறு ஏதேனும் திட்ட தொடக்கத்திற்கு இது வழிவகுக்கும் என்பது கூறுவதற்கு கடினம்.  ஆனால், பாகிஸ்தான் தரப்பில் பேசியுள்ளது சிறந்த முறையிலானது இல்லை.  இது அவர்கள் யார் என காட்டியுள்ளது என இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்