குஜராத்தில் 4 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: மாநிலங்களவை தேர்தலில் பா.ஜனதா 3 இடங்களை கைப்பற்றுமா?

குஜராத் மாநிலத்தில் 4 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதனால் மாநிலங்களவை தேர்தலில் பாரதீய ஜனதா 3 இடங்களை கைப்பற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Update: 2020-03-15 21:47 GMT
ஆமதாபாத்,

குஜராத் மாநிலத்தில், முதல்-மந்திரி விஜய் ருபானி தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிறது.

அந்த மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 4 எம்.பி.க்களை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் வரும் 26-ந் தேதி நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் 3 இடங்களுக்கு ஆளும் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அந்த கட்சி சார்பில், அபய் பரத்வாஜ், ரமிலா பாரா, நர்ஹாரி அமீன் ஆகியோர் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி, 2 இடங்களுக்கு வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. அவர்கள் அந்த கட்சியின் மூத்த தலைவர்களான சக்தி சிங் கோஹில், பரத்சிங் சோலங்கி ஆவார்கள்.

மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சற்றும் எதிர்பாராத வகையில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் தங்களது பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்துள்ளனர். அவர்களின் ராஜினாமாக்களை சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி ஏற்றுக்கொண்டு விட்டார்.

இதை ஆமதாபாத்தில் அவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேற்று அளித்த பேட்டியின்போது தெரிவித்தார். ஆனால் பதவி விலகிய எம்.எல்.ஏ.க்கள் பெயர்களை அவர் வெளியிடவில்லை. அதை 16-ந் தேதி (இன்று) சட்டசபையில் வெளியிடுவேன் என அவர் தெரிவித்தார்.

இதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் பலம் 69 ஆக குறைந்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 22 பேர் ராஜினாமா செய்துள்ள நிலையில், குஜராத்திலும் அந்த கட்சி எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் இப்போது ராஜினாமா செய்திருப்பது, கட்சி மேலிடத்துக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

குஜராத் சட்டசபையில் மொத்த இடங்கள் 182 ஆகும். இதில் 2 இடங்கள் காலியாக இருந்தன. தற்போது 4 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகியதால் சட்டசபையின் பலம் 176 ஆக குறைந்துள்ளது.

கட்சிகள் பலம் வருமாறு:-

மொத்த இடங்கள் - 182

பாரதீய ஜனதா - 103

காங்கிரஸ் - 69

தேசியவாத காங்கிரஸ் கட்சி - 1

பாரதீய பழங்குடி கட்சி - 2

சுயேச்சை - 1

காலி இடங்கள் - 6

ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கு 103 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எனவே அந்த கட்சி எளிதாக 2 இடங்களை கைப்பற்ற முடியும். 3-வது இடத்தை கைப்பற்ற அந்த கட்சிக்கு கூடுதல் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. எனவே அந்த கட்சி 3 இடங்களை கைப்பற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதே போல் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 69 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. இந்த கட்சி 2 வேட்பாளர்களை நிறுத்தியுள்ள நிலையில் முதல் வேட்பாளர் எளிதாக ஜெயிக்க முடியும். 2-வது வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு அந்த கட்சிக்கும் கூடுதல் உறுப்பினர்கள் ஆதரவு தேவைப்படுகிறது.

பாரதீய ஜனதாவின் 3-வது வேட்பாளரும் சரி, காங்கிரசின் 2-வது வேட்பாளரும் சரி வெற்றி பெற வேண்டுமானால் கட்சி மாறி ஓட்டுகள் விழ வேண்டும்.

இந்த பரபரப்பான சூழலில், குதிரைப்பேரம் நடைபெறுவதை தடுக்க காங்கிரஸ் கட்சி தனது எம்.எல்.ஏ.க்கள் 14 பேரை, அந்த கட்சி ஆட்சி செய்யும் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூருக்கு அனுப்பி அங்கு தங்கவைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும் செய்திகள்