இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 151 ஆக உயர்வு: உத்தரபிரதேச டாக்டருக்கும் பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்து விட்டது.

Update: 2020-03-18 23:30 GMT
புதுடெல்லி,

உலகையே முடக்கி உள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது கொடூர கரங்களை பரப்பி வருகிறது. மராட்டியம், டெல்லி, கர்நாடகா, உத்தரபிரதேசம் என பல மாநிலங்களில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெருகி உள்ளது.

இந்தியாவில் நேற்று முன்தினம் மாலை வரை இந்த ஆட்கொல்லி வைரசின் கரங்களில் சிக்கியவர்களின் எண்ணிக்கை 137 ஆக இருந்தது. ஆனால் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மேலும் 14 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் நாட்டில் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இவர்களில் 25 பேர் வெளிநாட்டினர் ஆவர். வைரஸ் தாக்கியவர்களில் 3 பேர் உயிரிழந்து விட்டனர். 14 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

வைரஸ் பாதித்தவர்களுடன் தொடர்புடைய 5,700-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு கடுமையாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தாக்கியவர்களில் மராட்டியம், கேரளா, உத்தரபிரதேசம் மாநிலங்களை சேர்ந்தவர்களே அதிகம் ஆவர். அந்த வகையில் மராட்டியத்தில் 42, கேரளாவில் 27, உத்தரபிரதேசத்தில் 16, கர்நாடகாவில் 11, தெலுங்கானாவில் 6 பேர் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதைப்போல வெளிநாடுகளில் வசித்து வரும் இந்தியர்களிலும் 276 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். இதில் அதிகபட்சமாக ஈரானில் 255 பேரும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 12 பேரும், இத்தாலியில் 5 பேரும் பாதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு நேற்று தெரிவித்தது.

இந்தியாவில் புதிதாக வைரஸ் தாக்கியவர்களில் குறிப்பிடத்தக்க அம்சமாக, லடாக் ராணுவ வீரர் ஒருவர் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி உள்ளார். இதன் மூலம் இந்திய ராணுவத்திலும் கொரோனா நுழைந்திருக்கிறது. லே பகுதியை சேர்ந்த இந்த வீரரின் தந்தை, சகோதரர் ஆகியோருக்கும் ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது.

இதைப்போல உத்தரபிரதேசத்தின் லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த டாக்டர் குழுவில் இடம்பெற்று இருந்த இளம் டாக்டர் ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக சக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு கொரோனா தொற்றின் வீரியம் அதிகரித்து வருவதை தொடர்ந்து மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் லடாக்கின் கார்கில் மாவட்டத்தில் 144 தடை (5 அல்லது அதற்கு மேற்பட்டோர் கூடுவதற்கு தடை) உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதைப்போல திரிபுரா முழுவதும் மாநில அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. எனினும் மாநிலத்தில் யாருக்கும் வைரஸ் தொற்று இல்லாத நிலையில், இந்த தடை உத்தரவை நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

வைரஸ் பீதி காரணமாக நாடு முழுவதும் கோர்ட்டுகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அதன்படி வருகிற 31-ந் தேதி வரை ராஜஸ்தான் ஐகோர்ட்டு நாள்தோறும் 2 மணி நேரமே செயல்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் என கூறியுள்ள ஐகோர்ட்டு நிர்வாகம், மாநிலத்தில் உள்ள கீழ் கோர்ட்டுகளும் இந்த நடைமுறையை பின்பற்ற அறிவுறுத்தி உள்ளது.

இதைப்போல டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு விசாரணைகள் அனைத்தையும் காணொலி காட்சி மூலம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டு உள்ளது.

உத்தரபிரதேசத்தில் பள்ளிகள் மூடப்பட்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதால், 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே அடுத்த வகுப்புக்கு அனுப்பி வைக்கப்படுவர் என அரசு அறிவித்து உள்ளது.

கர்நாடகாவில் கல்வி நிறுவனங்கள் மூடல் போன்ற கட்டுப்பாடுகள் அனைத்தும் மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்படலாம் என முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்