பல்லாரியில் உடல்களை தூக்கி வீசிய சம்பவம்: அனைவரும் மனிதநேயத்துடன் நடந்து கொள்ளுங்கள் - எடியூரப்பா வேண்டுகோள்

பல்லாரியில் உடல்களை தூக்கி வீசிய சம்பவம் தொடர்பாக அனைவரும் மனிதநேயத்துடன் நடந்து கொள்ளுங்கள் என்று முதல்-மந்திரி எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2020-07-01 10:57 GMT
பெங்களூரு, 

பல்லாரியில் நேற்று முன்தினம் கொரோனாவால் மரணம் அடைந்தவர்களின் உடல்களை, குழி தோண்டி, துணியில் எடுத்து வந்து, தூக்கி வீசினர். ஒரே குழியில் 3, 4 உடல்கள் தாறுமாறாக தூக்கி போட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்தி தொலைக்காட்சிகளில் வெளியாகிது. இதை பார்த்தவர்கள் சற்று அதிர்ந்து போயினர். இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. 

இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

பல்லாரி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை ஊழியர்கள் அடக்கம் செய்த விதம், மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாக உள்ளது. கொரோனா நோயாளிகள் மற்றும் அதனால் மரணம் அடைகிறவர்களின் உடல்களை கையாள்வதில் மருத்துவ ஊழியர்கள் மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும். இறுதிச்சடங்கை உரிய மரியாதையுடன் மேற்கொள்வது அவசியம். நாம் அனைவரும் மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும். மனிதநேயத்தை விட பெரிய பணி வேறு எதுவும் இல்லை.

இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்