சபரிமலையில் தினமும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி - மந்திரி கடகம் பள்ளி சுரேந்திரன் தகவல்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று முதல் தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவதாக கேரள தேவஸ்தான துறை மந்திரி கடகம் பள்ளி சுரேந்திரன் தெரிவித்தார்.

Update: 2020-12-23 03:32 GMT
திருவனந்தபுரம்,

கொரோனா பரவல் காரணமாக சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக குறிப்பிட்ட அளவு பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுவும் ஆன்லைன் முன்பதிவு, கொரோனா இல்லை என்ற பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் தரிசனத்திற்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க உத்தரவிட கோரி கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, சபரிமலை கோவிலில் தரிசனத்திற்கு தினசரி 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க உத்தரவிட்டது.

இந்தநிலையில், தேவஸ்தான துறை மந்திரி கடகம் பள்ளி சுரேந்திரன் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கேரள ஐகோர்ட்டின் உத்தரவுபடி இன்று (புதன்கிழமை) முதல் சபரிமலையில் தினமும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு www.sabarimalaonline.org என்ற இணையதளத்தில் தொடங்கி உள்ளது. சாமி தரிசனத்திற்கு வரும் அய்யப்ப பக்தர்கள் தரிசனத்திற்கு 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கொண்டு வர வேண்டும். 26-ந் தேதிக்கு பின், அனைத்து பக்தர்களுக்கும் கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர். மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்