உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை - பிரதமர் மோடி

உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2020-12-26 08:29 GMT
புதுடெல்லி, 

ஆயு‌‌ஷ்மான் பாரத் என்ற பெயரிலான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. ஏழை எளியோருக்கு இலவச சிகிச்சை வழங்க இது வழிவகுக்கிறது. 

இந்நிலையில் கா‌‌ஷ்மீரில் அனைவருக்கும் சுகாதார காப்பீட்டு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் கா‌‌ஷ்மீர் மக்கள் அனைவரும் கொண்டு வரப்படுகின்றனர். இந்த நிகழ்ச்சியில் உள்துறை மந்திரி அமித்‌ஷாவும், துணை நிலை கவர்னர் மனோஜ் சின்காவும் கலந்து கொண்டனர். 

இந்த திட்டம், கா‌‌ஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் வாழும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு தலா ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ சேவைகளை பெற வழிவகுத்துள்ளது.

இதனைத்தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “ஜனநாயகத்தை வலுப்படுத்த ஜம்மு-காஷ்மீர் மக்கள் வாக்களித்துள்ளனர். நடந்து முடிந்த தேர்தலில் அனைத்து தரப்பு மக்களும் வெளியே வந்து வளர்ச்சிக்கு வாக்களித்தனர். ஒரு காலத்தில் நாங்கள் ஜம்மு-காஷ்மீர் அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருந்தோம், ஆனால் நாங்கள் கூட்டணியை முறித்துக் கொண்டோம். பஞ்சாயத்து தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும், மக்களுக்கு அவர்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாக இருந்தது. சம்பா, பூஞ்ச், கத்துவா உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் பதுங்கு குழிகளை நிர்மாணிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

புதுச்சேரியில் பஞ்சாயத்து மற்றும் நகராட்சி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், அங்கு தேர்தல்கள் நடத்தப்படவில்லை. ஜனநாயகம் குறித்து எங்களுக்கு பாடங்களை கற்பிப்பவர்கள்தான், புதுச்சேரியில் ஆட்சி நடத்துகிறார்கள்” என்று கூறினார்.

மேலும் செய்திகள்