ரோஹிங்கியா அகதிகளை உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் மியான்மருக்கு அனுப்பக்கூடாது - உச்சநீதிமன்றம்

ஜம்முவில் கைது செய்யப்பட்ட ரோஹிங்கியா அகதிகளை உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் மியான்மருக்கு அனுப்பக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-08 11:29 GMT
புதுடெல்லி,

மியான்மர் நாட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ராணுவம் தாக்குதலை நடத்தியது.  இதில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து லட்சக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர். வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக ரோஹிங்கியா அகதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து பல்வேறு மாநிலங்களில் வாழ்ந்து வருகின்றனர். உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக இந்தியாவின் பல மாநிலங்களில் வாழ்ந்துவரும் ரோஹிங்கியா அகதிகளை கண்டுபிடிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சி மேற்கொண்டு வ்ருகிறது.

இதற்கிடையில், கடந்த மாதம் 7-ம் தேதி ஜம்முகாஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஜம்மு பகுதியில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அப்பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி 160 ரோஹிங்கியா அகதிகள் சட்டவிரோதமாக வசித்து வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, அவர்கள் அனைவரும் ஜம்முவில் உள்ள முகாமுக்கு மாற்றப்பட்டனர். மேலும், பிடிபட்ட அகதிகள் அனைவரையும் மீண்டும் மியான்மருக்கு அனுப்பிவைக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில், ஜம்முவில் பிடிபட்ட ரோஹிங்கியா அகதிகளை விடுதலை செய்யவேண்டும் எனவும் அகதிகளை மியான்மருக்கு அனுப்பும் நடைமுறையை நிறுத்த வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டது. 

இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜம்முவில் பிடிபட்ட ரோஹிங்கியா அகதிகளை உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் மியான்மருக்கு அனுப்பக்கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.  

மேலும் செய்திகள்