மராட்டியத்தில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்த வேண்டியதில்லை: உத்தவ் தாக்கரே
மக்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுவதால் கடுமையான ஊரடங்கை அமல்படுத்த வேண்டியது இல்லை என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.;

மும்பை,
மராட்டியத்தில் கொரோனா பரவல் தினம் தினம் புதிய உச்சம் நோக்கி சென்றது. இதனால், மாநிலத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா வைரஸ் தொற்று பரவல் கடந்த சில நாட்களாக சீரான நிலையில் உள்ளது.
மும்பையில் கொரோனா தொற்று விகிதம் 10 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்த நிலையில், தொலைக்காட்சி வாயிலாக இன்று மாநில மக்களுக்கு உரையாற்றிய உத்தவ் தாக்கரே கூறியதாவது:-
கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றி வருகிறார்கள். இதனால், மராட்டியத்தில் கடுமையான ஊரடங்குக்கு அவசியம் இல்லை. பொது முடக்க கட்டுப்பாடுகளால் கொரோன பரவலை கட்டுப்படுத்த முடிந்துள்ளது. கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டும் நாங்கள் கணித்திருந்தோம்.
ஆனால் தற்போது 7 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். ஆக்சிஜன் தட்டுப்பாடு சூழலை எதிர்கொண்டுள்ளோம். 1,700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படும் நிலையில் 1,200 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே உற்பத்தி செய்ய முடிகிறது. கிட்டதட்ட 500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.