தண்டனை காலம் முடிந்த கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் - மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தண்டனை காலம் முடிந்த பிறகும் கைதிகள் சிறையில் தவித்து வருவது கவலை அளிப்பதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.;

Update:2025-08-13 06:29 IST

புதுடெல்லி,

டெல்லியில் ஒரு நிறுவனத்தின் உயர் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் நிதிஷ் கட்டாரா. இவர், எம்.பி.யாகவும், தொழில் அதிபராகவும் இருந்த டி.பி.யாதவின் மகள் பாரதி என்ற பெண்ணை காதலித்தார்.

இருவரும் வெவ்வேறு சாதிகளை சேர்ந்தவர்கள். அவர்களது காதலை டி.பி.யாதவ் குடும்பத்தினர் விரும்பவில்லை. எனவே, டி.பி.யாதவின் மகன் விகாஷ் யாதவ், தனது உறவினர்கள் விஷால் யாதவ், சுக்தேவ் யாதவ் ஆகியோருடன் சேர்ந்து, கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 16-ந் தேதி இரவு, நிதிஷ் கட்டாராவை கடத்திச் சென்றார். பின்னர் அவரை ஆணவக் கொலை செய்தனர்.

இந்த வழக்கில் விகாஷ் யாதவ், விஷால் யாதவ், சுக்தேவ் யாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விகாஷ் யாதவ், விஷால் யாதவ் ஆகியோருக்கு தலா 25 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், சுக்தேவ் யாதவுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

இதற்கிடையே, கடந்த மார்ச் 9-ந் தேதியுடன் சுக்தேவ் யாதவின் 20 ஆண்டுகால சிறைத்தண்டனை முடிவடைந்தது. ஆனால் அதன்பிறகும் அவர் விடுதலை செய்யப்படவில்லை.

அதை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கடந்த ஜூன் மாதம், சுக்தேவ் யாதவை 3 மாதங்கள் பரோலில் விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்நிலையில், நேற்று இவ்வழக்கில் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

இதுதொடர்பாக நீதிபதிகள் கூறுகையில், “தண்டனை காலம் முடிந்த பிறகும் கைதிகள் சிறையில் தவித்து வருவது கவலை அளிக்கிறது. சுக்தேவ் யாதவின் தண்டனை காலம் முடிந்தவுடன் அவரை விடுதலை செய்திருக்க வேண்டும். கடந்த மார்ச் 9-ந் தேதிக்கு பிறகு அவரை சிறையில் வைத்திருக்கக்கூடாது. மார்ச் 10-ந் தேதி விடுதலை செய்திருக்க வேண்டும். அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும்.

தண்டனை காலம் முடிந்த பிறகும் எந்த கைதியாவது சிறையில் இருக்கிறாரா என்பதை சரிபார்ப்பதற்காக இந்த உத்தரவின் நகலை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உள்துறை செயலாளர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் அனுப்பிவைக்க வேண்டும்.

அப்படி யாராவது இருந்தால், அவர்கள் மீது வேறு வழக்குகள் இல்லாதபட்சத்தில் அவர்களை உடனே விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும். அதுபோல், மாநில சட்டப்பணிகள் ஆணையங்கள், மாவட்ட சட்டப்பணிகள் ஆணையங்கள் ஆகியவையும் இந்த உத்தரவை அமல்படுத்தும்வகையில், அந்த ஆணையங்களின் உறுப்பினர் செயலாளர்களுக்கும் உத்தரவின் நகலை அனுப்பிவைக்க வேண்டும்” என்று தங்கள் உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்