பெங்களூரு போக்குவரத்து நெரிசல் பற்றி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய 5 வயது சிறுமி
சிறுமியின் கடிதத்தை இதுவரை 5 லட்சத்து 96 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.;
பெங்களூரு,
பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் போக்குவரத்து நெரிசலில் 2-வது இடத்தை பெங்களூரு பிடித்துள்ளது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மெட்ரோ ரெயில் சேவை, மேம்பாலங்கள் கட்டுதல் உள்ளிட்டவற்றை மேற்கொண்டும் தீர்வு கிடைக்கவில்லை.
இந்த நிலையில் பிரதமரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பெங்களூருவை சேர்ந்த 5 வயது சிறுமியான ஆர்யா பெங்களூரு போக்குவரத்து நெரிசல் பற்றி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை அவரது தந்தை அபிரூப் சட்டர்ஜி தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த கடிதத்தில் சிறுமி எழுதியிருப்பதாவது:-
“நரேந்திர மோடி ஜி” போக்குவரத்து நெரிசல் அதிகம். நாங்கள் பள்ளிக்கு செல்ல தாமதம் ஆகிறது. அதுபோல் வேலைக்கு செல்வோரும் அலுவலகத்திற்கு செல்லவும் சிரமப்படுகிறார்கள். அதுமட்டுமின்றி சாலையும் மிகவும் மோசமாக உள்ளது. தயவு செய்து உதவுங்கள்” இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த கடிதம் சமூகவலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.
இதை பார்த்த பலரும் சிறுமியை பாராட்டியுள்ளனர். இந்த கடிதத்தை பார்த்து பிரதமர் மோடி அலுவலக எக்ஸ் தள கணக்கும் லைக் போட்டுள்ளது. இதுவரை இந்த கடிதத்தை 5 லட்சத்து 96 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். அத்துடன் பலரும் இந்த கடிதம் பற்றி தங்களது கருத்துகளை பதிவிட்டுள்ளனர். ஒருவர், பிரதமர் மோடி விரைவில் உங்கள் மகளை சந்திப்பார். அவளுடைய ஆசை நிறைவேறும் என குறிப்பிட்டுள்ளார். மற்றொரு நெட்டிசன், சிறுமியின் செயலையும், முயற்சியையும் பாராட்டுகிறேன் என கூறியுள்ளார்.