பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்திய நபர்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர் வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்தினார்.

Update: 2021-06-08 07:02 GMT
திருவனந்தபுரம்,

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் லிட்டர் விலை 100 ரூபாயை கடந்துள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல், லிட்டர் 96.23 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 90.38 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால், மக்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். 

இதற்கிடையில், சர்வதேச அளவில் சமீபத்திய கச்சா எண்ணெய் விலை உயர்வுதான் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் என்று மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பெட்ரோல் பங்குகளில் நீங்கள் பணம் செலுத்தும்போது, மோடி அரசின் பணவீக்க உயர்வை உணர்வீர்கள். வரி வசூல் தொற்று அலைகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன’ என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், கேரளாவில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர் வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்தினார். நேற்று கோழிக்கோடு பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையம் சென்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அமைப்பினர் கிரிக்கெட் பேட்டை சதம் அடிப்பது போல காண்பித்து பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். 

மேலும் செய்திகள்