கேரளாவில் இன்று முதல் பஸ் போக்குவரத்து இயக்கப்படுகிறது - போக்குவரத்து துறை மந்திரி தகவல்

கேரளாவில் இன்று முதல் அரசு பஸ் போக்குவரத்து இயக்கப்படுகிறது என்று போக்குவரத்து துறை மந்திரி ஆன்டனி ராஜு தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-08 23:50 GMT
திருவனந்தபுரம்,

கேரளாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் இன்று முதல் அரசு பஸ் போக்குவரத்து இயக்கப்படுகிறது என்று போக்குவரத்து துறை மந்திரி ஆன்டனி ராஜு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக போக்குவரத்து துறை மந்திரி ஆன்டனி ராஜு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா ஊரடங்கு காரணமாக கேரளாவில் பஸ் போக்குவரத்து கடந்த மாதம் 8-ந் தேதி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு தற்போது 20 ஆயிரத்துக்கும் கீழே வருகிறது. படிப்படியாக தொற்று குறைந்து வருவதால் தளர்வுகள் அறிவிக்கப்படுகிறது. இதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு கேரளாவில் பஸ் போக்குவரத்தை தொடங்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

முதல் கட்டமாக இன்று (புதன்கிழமை) முதல் நீண்ட தூர பஸ்கள் இயக்கப்படும். தொடர்ந்து படிப்படியாக அனைத்து பகுதிகளுக்கும் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். நீண்ட தூர பயணத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

அண்டை மாநிலங்களுக்கு இடையேயான பஸ் போக்குவரத்து குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கொரோனா விதிமுறைகளின்படி பஸ்களில் கூட்டம் கூடுவது கட்டுப்படுத்தப்படும். பயணிகள் நின்று பயணம் செய்ய அனுமதி இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கேரளாவில் வருகிற 16-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பஸ் போக்குவரத்தை தொடங்க கூடாது என்று சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டது. ஆனால் இந்த பரிந்துரையை ஏற்க அரசு மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்