பீகாரில் வியாபாரி கொலை வழக்கில் உள்ளூர் தாதா உள்பட 10 பேருக்கு தூக்கு தண்டனை

பீகாரில் வியாபாரி கொலை வழக்கில் உள்ளூர் தாதா உள்பட 10 பேருக்கு தூக்குதண்டனைவிதிக்கப்ப்ட்டு உள்ளது.;

Update:2021-06-16 12:03 IST
பாட்னா

பபீகாரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தையில் வியாபாரியை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக் கொன்ற உள்ளூர் தாதா மற்றும் அவரது கூட்டாளிகள் உட்பட 10 பேருக்கு தூக்கு  தண்டனை விதித்து போஜ்பூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், 10 பேருக்கும் தலா ரூ.2.60 லட்சம் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தின்  ஆரா நகரில்  தர்மன் சவுக் பகுதியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த ஷோபா மார்க்கெட் உள்ளது. இங்கு முகம்மது இம்ரான் கான் என்பவர் தோல் பொருட்கள், பைகள்,பேக்குகள் விற்பனை செய்துவந்தார். அப்பகுதியில் இவரது கடை மிகவும் பிரபலமாக விளங்கியது.

இந்நிலையில் இவரது கடைக்கு கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி உள்ளூர் தாதா குர்ஷித் குரேஷி தனது ஆட்களுடன் வந்தார். வியாபாரி இம்ரான் கானிடம் ரூ.10 லட்சம் கேட்டு அவர் மிரட்டியுள்ளார். இம்ரான் கான் பணம் தர மறுத்ததை அடுத்து, அவர்கள் இடையே பெரும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, குர்ஷித் குரேஷியும், அவரது கூட்டாளிகளும் இம்ரான் கானை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளனர். இதில் இம்ரான்கான் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இந்த தாக்குதலில் அவரது தம்பி அகில் அகமதுவும் மற்றொருவரும் படுகாயம் அடைந்தனர்.

மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தையில் பட்டப்பகலில் நடந்த இந்தப் படுகொலை சம்பவம்அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக ஆரா நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இம்ரான் கானின் தம்பிஅகில் அகமது அளித்த வாக்குமூலம் இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக அமைந்தது.

அதன் அடிப்படையில் குர்ஷித்குரேஷி, அவரது சகோதரர் குர்ஷித்அப்துல்லா உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் கொலை,குற்றச் சதி, பணம் கேட்டு மிரட்டுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆயுதங்கள் தடைசட்டத்தின் கீழும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த குரேஷி சகோதரர்களால் இந்தப் படுகொலை திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

போஜ்பூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் கடந்த ஜனவரி மாதம் குர்ஷித் குரேஷி உள்ளிட்ட 10 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் தண்டனை விவரத்தை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி மனோஜ் குமார் காணொலி காட்சி மூலம் நேற்று முன்தினம் அறிவித்தார்.

இதில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட குர்ஷித் குரேஷி, அவரது சகோதர் குர்ஷித் அப்துல்லா மற்றும் அன்வர் குரேஷி, குட்டு மியான், ஷாம்ஷெர் மியான், புர்ச்சான் மியான், பப்லி மியான், அகமது மியான், ராஜு கான், தவுசிப் ஆலம் ஆகிய 10 பேருக்கும் அவர் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், 10 பேருக்கும் தலா ரூ.2.60 லட்சம் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தீர்ப்புவிவரங்களை உதவி அரசு வழக்கறிஞர் நாகேந்திர பிரசாத் சிங் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்