மும்பையில் முகாம்களை நடத்தி கைவரிசை 2 ஆயிரம் பேருக்கு போலி தடுப்பூசி மோசடி கும்பல் பற்றி பரபரப்பு தகவல்கள்
மும்பையில் முகாம்களை நடத்தி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு போலி தடுப்பூசி போடப்பட்டது அம்பலமாகி உள்ளது. இந்த மோசடி கும்பல் பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.;
மும்பை,
நாட்டில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால், அதற்காக பலர் பரிதவித்து வருகின்றனர்.
தடுப்பூசி முகாம்
மும்பையில் இதனை சாதகமாக்கி கொண்ட ஒரு கும்பல் பொதுமக்களுக்கு போலி தடுப்பூசி போட்டு பணத்தை கறந்த சம்பவம் சமீபத்தில் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியது.
அதாவது மும்பை காந்திவிலி எஸ்.வி. ரோடு பகுதியில் ஹிரானந்தானி அடுக்குமாடி குடியிருப்பு சங்க நிர்வாகத்தை பிரபல தனியார் ஆஸ்பத்திரி சார்பில் அணுகிய ஒரு கும்பல், அங்கு வசித்து வரும் 390 பேருக்கு தடுப்பூசி போட்டது. அதற்காக பயனாளிகளிடம் தலா ரூ.1,260-ஐ வசூலித்தனர். அதற்கான சான்றிதழை தடுப்பூசி முகாமின் போது கொடுக்கவில்லை. இதுபற்றி கேட்டபிறகு தாமதமாக பல்வேறு பிரபல தனியார் ஆஸ்பத்திரிகள் பெயரில் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
போலி தடுப்பூசி
மேலும் தடுப்பூசி போட்டதற்கான தகவல்கள் கோவின் இணைய தளத்தில் இடம்பெறாததால் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தடுப்பூசி போட்ட யாருக்கும் காய்ச்சல், உடல்வலி போன்ற பக்க விளைவுகள் ஏற்படாததால், தாங்களுக்கு போடப்பட்டது போலி தடுப்பூசி என்றும், பணமோசடி கும்பல் கைவரிசை காட்டியதும் தெரியவந்தது. தடுப்பூசி சான்றிதழில் இடம்பெற்றுள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரிகள் தாங்கள் இதுபோன்ற தடுப்பூசி முகாம்களை நடத்தவில்லை என்று மறுப்பு தெரிவித்தனர்.
இது தடுப்பூசி போட்டுக்கொண்ட பலருக்கு கிலியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் அளித்த புகாரின் பேரில், மோசடி கும்பலை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒரு டாக்டர் முன்ஜாமீன் கோரியுள்ளார்.
2 ஆயிரத்து 53 பேருக்கு...
இந்த விவகாரம் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், வழக்கின் நிலை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி விசாரணை நிலை அறிக்கையை தலைமை நீதிபதி தீபன்கர் தத்தா, நீதிபதி ஜி.எஸ்.குல்கர்னி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று அரசு தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள பரபரப்பு தகவல்கள் வருமாறு:-
போலி கொரோனா தடுப்பூசி புகார் தொடர்பாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 400 பேரிடம் சாட்சியம் பெறப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் ஒரு டாக்டர் உள்பட சிலர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். மேலும் பலர் தலைமறைவாக உள்ளனர். இந்த மோசடி கும்பல் 9 முகாம்களை நடத்தி, 2 ஆயிரத்து 53 பேருக்கு போலி கொரோனா தடுப்பூசி போட்டு இருப்பது இதுவரையிலான நிலவரப்படி தெரியவந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற 29-ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.