ஒடிசா பூரி ஜெகந்நாதர் ஆலய ரத யாத்திரை தொடங்கியது; ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து

ஒடிசா பூரி ஜெகந்நாதர் ஆலய ரத யாத்திரை தொடங்கிய நிலையில் 2 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

Update: 2021-07-12 05:16 GMT



புதுடெல்லி,

ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி ஜெகந்நாதர் ஆலயத்தின் ரத யாத்திரை திருவிழா உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது.  இந்நிலையில், கொரோனா பெருந்தொற்றை முன்னிட்டு இந்த திருவிழா பக்தர்கள் இன்றி இன்று நடைபெறுகிறது.

இந்த விழாவில் பக்தர்களை அனுமதிப்பது கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு ஏற்படும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.  கடந்த ஆண்டும் கொரோனா பெருந்தொற்றை தவிர்க்கும் வகையில் பக்தர்கள் இன்றி ரத யாத்திரை திருவிழா நடந்தது.

ஜெகந்நாதரின் தேர் 16 சக்கரங்களை கொண்ட சிவப்பு, மஞ்சள் நிற தேராகும். 14 சக்கரங்களை கொண்ட சிவப்பு, பச்சை நிறமுடைய தேரில் பலபத்திரர் எனப்படும் பலராமரும், 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு, கறுப்பு நிற தேரில் ஜெகந்நாதரின் தங்கையான சுபத்திரை தேவியும் நகர்வலம் வருவார்கள்.

தேரோடும் ரத்ன வீதியை பொன்னாலான துடைப்பத்தால் பூரி நகர மன்னர் கஜபதி சுத்தம் செய்வது வழக்கம். முதலில் மூத்த சகோதர பலராமரின் தேரும், அதன் பின்னர் தங்கை சுபத்திரை தேவியின் தேரும் நகர்வலம் வரும். இறுதியாக ஜெகந்நாதரின் ரதம் கிளம்பும்.

ஆண்டுதோறும் 45 அடி உயரமும், 35 அடி அகலமும் கொண்ட புதிய ரதங்கள் உருவாக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.  ஓராண்டு பயன்படுத்தப்படும் தேர் மறு ஆண்டு பயன்படுத்தப்படுவதில்லை.

9 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா இன்று காலை தொடங்கியது.  இதனை முன்னிட்டு 2 நாள் ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.  இதன்படி, வருகிற 13ந்தேதி இரவு 8 மணிவரை ஊரடங்கு அமலில் இருக்கும்.  பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பிற்காக 65 போலீசார் குழு அடங்கிய படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.  பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என வடக்கு பகுதி ஐ.ஜி.பி. போல் கூறியுள்ளார்.

இந்த ரத யாத்திரை விழாவுக்கு வருபவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.  அதில் கொரோனா தொற்றில்லாத நபர்களுக்கே அனுமதி அளிக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் இந்த ரத யாத்திரையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்துகளை இன்று தெரிவித்து கொண்டார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஒடிசாவில் உள்ள அனைத்து பக்தர்கள் உள்பட நாட்டு மக்கள் அனைவருக்கும், ஜெகந்நாதர் ஆலய ரத யாத்திரை விழாவை முன்னிட்டு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

கடவுள் ஜெகந்நாதர் ஆசியால், நாட்டு மக்கள் அனைவரின் வாழ்வு முழுவதும் மகிழ்ச்சி, வளம் மற்றும் சுகாதாரம் ஆகியவை நிரம்பியிருக்கும் என தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று பிரதமர் மோடி டுவிட்டரில் இன்று காலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ரதயாத்திரை சிறப்பு தருணத்தில் ஒவ்வொருவருக்கும் எனது வாழ்த்துகள்.  ஒவ்வொருவரின் வாழ்விலும் உடல்நலம் மற்றும் வளம் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும் என ஜெகந்நாதரை வணங்கி, வேண்டி கேட்டு கொள்வோம்.  ஜெய் ஜெகந்நாதர் என தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்