உத்தரகாண்டில் நகைக்கடைக்காரர் மனைவியிடம் ரூ.1¾ கோடி மோசடி; போலி சாமியார் கைது

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் மகேந்திர ரோட் என்ற பிரியாவ்ரத் அனிமேஷ். தன்னை சாமியார் என்று கூறிக்கொண்ட இவரது ஆன்மிக, நீதிநெறி கொள்கைகள் சார்ந்த புத்தகத்தை கடந்த 9-ந் தேதி முதல்-மந்திரி புஷ்கர்சிங் தாமி வெளியிட்டார். அப்போது, புஷ்கர்சிங் தாமியுடன் அனிமேஷ் இருக்கும் புகைப்படத்தையும் முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்டது.;

Update:2021-07-13 06:00 IST
இந்நிலையில், ரிஷிகேஷை சேர்ந்த பிரபல நகைக்கடைக்காரரான ஹிதேந்திர பன்வார், தனது மனைவியை சாமியார் அனிமேஷ் ஏமாற்றி, ரூ.1.75 கோடி பணம், நகையை பறித்துவிட்டதாக போலீசில் புகார் தெரிவித்தார். தனது மனைவி மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதால் அவரை சாமியார் மோசடி செய்துவிட்டதாகவும் நகைக்கடைக்காரர் அந்த புகாரில் கூறியிருந்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, போலி சாமியார் அனிமேஷை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்க, வெள்ளி நகைகளையும் கைப்பற்றினர். போலீஸ் விசாரணைக்கு பின் அனிமேஷ், 14 நாள் கோர்ட்டு காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். செல்வாக்கு மிக்க நபர்களுடன் படம் எடுத்துக்கொள்ளும் போலி சாமியார் அனிமேஷ், அதைப் பயன்படுத்தி பலரை ஏமாற்றியுள்ளார். ஏற்கனவே அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இருமுறை சிறைக்கும் அனுப்பப்பட்டுள்ளார். அவர் மோசடி செய்த மற்ற நகைகள், பணத்தையும் மீட்க நடவடிக்கை எடுத்துவருவதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்