எல்கர் பரிஷத் வழக்கில் கைதான ஆனந்த் டெல்டும்ப்டேவின் ஜாமீன் மனு தள்ளுபடி
எல்கர் பரிஷத் வழக்கில் கைதான சமூக செயல்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்ப்டேவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.;
மும்பை,
புனே மாவட்டம் பீமா கோரேகாவ் பகுதியில் நடைபெற்ற வன்முறைக்கு முந்தைய நாள் நடைபெற்ற எல்கர் பரிசத் மாநாட்டில் வன்முறை பேச்சு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவராக கருதப்படும் சமூக செயல்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்ப்டே கடந்த ஆண்டு தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) போலீசாரால் கைது செய்யப்பட்டு, நவிமும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
70 வயதான இவர் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி கடந்த ஜனவரி மாதம் மனு தாக்கல் செய்தார். அதில், தான் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்ததாக தேசிய புலனாய்வு முகமை கூறும் நிலையில், அதற்கான எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை. எனவே தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என கேட்டுக்கொண்டு இருந்தார்.
இந்த மனு மீது மும்பை கோர்ட்டில் விசாரணை நடைபெற்றது. அப்போது என்.ஐ. ஏ. சார்பில் ஆஜரான வக்கீல் பிரகாஷ் ஷெட்டி கூறுகையில், “ஆனந்த் டெல்டும்ப்டே மாவோயிஸ்டு அமைப்பின் தீவிர உறுப்பினர். அவருக்கு இந்த வழக்கில் தொடர்பு உள்ளது என்பதை நிரூபிக்க போதுமான வாய்வழி மற்றும் ஆவண வடிவிலான ஆதாரங்கள் உள்ளன" என்றார். இதை ஏற்றுக்கொண்ட கோர்ட்டு அவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.
இதே வழக்கில் கைது செய்யப்பட்ட சமூக செயல்பாட்டாளர் ஸ்டான் சாமி சமீபத்தில் மும்பை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.