கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க பெகாசஸ் உளவு மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது: காங்.குற்றச்சாட்டு

மத்திய அரசின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளால் இந்தியாவில் ஜனநாயகம் செத்துவிட்டது என காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது.

Update: 2021-07-21 00:03 GMT
பெங்களூரு, 

இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனத்தின் 'பெகாசஸ்' உளவு தொழில்நுட்ப மென்பொருள் உதவியுடன் இந்தியாவில் பத்திரிகையாளர்கள் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் அலைபேசிகள் ஒட்டு கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த  நிலையில் கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் இருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க  பெகாசஸ் மென்பொருள் பயன்படுத்தி உளவு பார்க்கப்பட்டதாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பரமேஷ்வர் விமர்சித்துள்ளார். 

கர்நாடக முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

பெகாசஸ் உளவு விவகாரங்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. தற்போது வெளிவந்துள்ள உளவு விவகாரத்தை பார்க்கும்போது, பா.ஜனதா ஆட்சி அதிகாரத்தை பிடிக்க எந்த நிலைக்கும் செல்லும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆட்சி அதிகாரத்தை பிடிக்கவும், மதசார்பற்ற கட்சிகளின் மாநில அரசுகளை கவிழ்க்கவும் பா.ஜனதா என்ன வேண்டுமானாலும் செய்யும் என்பது பகிரங்கமாகியுள்ளது.

கர்நாடகத்தில் இவ்வாறு உளவு பார்த்து குமாரசாமி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி கவிழ்க்கப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. கர்நாடகம் மட்டுமின்றி கோவா, புதுச்சேரி, மணிப்பூர், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இதே நிலையில் தான் ஆட்சியை கவிழ்த்துள்ளனர். 

மிக துணிச்சலான முறையில் குதிரை பேரம் நடத்துவது மற்றும் மத்திய அரசின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளால் இந்தியாவில் ஜனநாயகம் செத்துவிட்டது” இவ்வாறு பரமேஸ்வர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்