கேரளாவில் தங்க கடத்தலுக்கு உதவி; 3 சுங்க இலாகா இன்ஸ்பெக்டர்கள் டிஸ்மிஸ்

கேரளாவில் தங்க கடத்தலில் உதவி செய்த 3 சுங்க இலாகா இன்ஸ்பெக்டர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2021-07-25 00:15 GMT
திருவனந்தபுரம்,

கேரளாவில் விமான நிலையத்தில் தங்கம் கடத்தலுக்கு உதவி செய்த 3 சுங்க இலாகா இன்ஸ்பெக்டர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். 
கேரளாவில் உள்ள விமான நிலையங்கள் வழியாக  பல்வேறு நாடுகளில் இருந்து தங்கம் கடத்துவது அதிகமாக நடைபெற்று வருகிறது.  அவற்றில் கொச்சி, கோழிக்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய சர்வதேச விமான நிலையங்கள் வழியாக அதிகளவு தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. 
இதற்கிடையே, விமான நிலையத்தில் இருந்து தங்கம் கடத்தி வெளியே கொண்டு வருவதற்கு, கடத்தல் கும்பலுக்கு விமான நிலையத்தில் உள்ள சுங்க இலாகா அதிகாரிகளே உடந்தையாக இருப்பதும் தெரிய வந்துள்ளது. அந்த வகையில் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்டு 19ல் கண்ணூர் விமான நிலையத்தில் 4.5 கிலோ தங்கம் கடத்திய 3 பேரை சுங்க இலாகாவினர் கைது செய்தனர். 
இவர்களிடம் நடத்திய விசாரணையில், கண்ணூர் விமான நிலைய சுங்க இலாகாவில் பணிபுரிந்த ரோகித் சர்மா, சாகேந்திர பஸ்வான் மற்றும் கிஷன்குமார் ஆகிய 3 இன்ஸ்பெக்டர்கள் இந்த கடத்தல் கும்பலுக்கு உதவி செய்தது தெரியவந்தது.

தொடர்ந்து சுங்க இலாகாவினர் நடத்திய ரகசிய விசாரணையில், 3 இன்ஸ்பெக்டர்களும் தவறு செய்தது உறுதி செய்யப்பட்டது.  இதனையடுத்து 3 பேரும் சில மாதங்களுக்கு முன் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இந்நிலையில், சுங்க இலாகா ஆணையர் சுனித்குமார், 3 இன்ஸ்பெக்டர்களையும் டிஸ்மிஸ் செய்து நேற்று உத்தரவிட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்