பீகார் சட்டசபைக்கு ஹெல்மட், கருப்பு முக கவசம் அணிந்து வந்த எம்.எல்.ஏ.க்கள்

பீகார் சட்டசபையில் கடந்த மார்ச் 23-ந் தேதி பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, சிறப்பு ஆயுத போலீசுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதா கொண்டுவரப்பட்டது. அப்போது அதை எதிர்த்து எதிர்க்கட்சியான ராஷ்டிரீய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரை முற்றுகையிட்டனர்.

Update: 2021-07-26 19:15 GMT
அதைத் தொடர்ந்து சட்டசபைக்குள் அழைக்கப்பட்ட போலீசார், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். அப்போது சிலர் காயமடைந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில், பீகார் சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அப்போது ராஷ்டிரீய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் ஹெல்மட், கருப்பு முக கவசம் அணிந்து சட்டசபைக்கு வந்தனர்.

அரசாங்கம் தங்களை மீண்டும் தாக்கக்கூடும் என்பதால் இவ்வாறு அணிந்து வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். பட்ஜெட் கூட்டத்தொடரின்போது நடந்த சம்பவம் தொடர்பாக முதல்-மந்திரி நிதிஷ்குமார் மன்னிப்பு கேட்க வேண்டும். இதுதொடர்பாக தங்கள் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், சட்டசபையில் ஒரு தீர்மானத்தை கொண்டுவருவார் என ராஷ்டிரீய ஜனதாதள எம்.எல்.ஏ.வும், கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளருமான பாய் வீரேந்திரா, நிருபர்களிடம் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்