ராகுல்காந்திக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் - டெல்லி ஐகோர்ட்டில் மனு

ராகுல்காந்திக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-08-08 00:45 GMT
புதுடெல்லி,

டெல்லியில் 9 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். அந்த சிறுமியின் குடும்பத்தை டுவிட்டரில் பதிவிட்டதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சமூக ஆர்வலர் மகரந்த் சுரேஷ் மத்லேகர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

“டெல்லி கன்டோன்மென்ட்டில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்தை ராகுல்காந்தி டுவிட்டரில் பதிவிட்டது சிறார் நீதி சட்டத்துக்கும், போக்சோ சட்டத்துக்கும் எதிரானது. எனவே ராகுல்காந்திக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

இந்த விவகாரம் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் (என்.சி.பி.சி.ஆர்) சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்