10 வயது சிறுவனுடன் கட்டாய உறவு மோசான பாலியல் துன்புறுத்தல் ஆகாது - அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு

10 வயது சிறுவனை கட்டாயப்படுத்தி உறவு வைத்துக்கொண்ட குற்றவாளிக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட சிறைத் தண்டனையை குறைத்து அலகாபாத் ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-11-24 10:11 GMT
அலகாபாத்,

கடந்த ஜனவரி மாதம் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்டவர் தாக்கல் செய்த வழக்கில், மும்பை ஐகோர்ட்டின்  நாக்பூர் கிளை கடந்த ஜனவரி 19ம் தேதியன்று தீர்ப்பு வழங்கியது.

அதில், “குற்றம் சாட்டப்பட்ட நபர் சிறுமியின் ஆடைகளை கழற்றாமல் அவரின் உடலை சீண்டி உள்ளார், எனவே இது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுக்கும் போக்சோ சட்டத்தின்கீழ் குற்றமாகாது. உடல்ரீதியான தொடர்பு இல்லாததால் போக்சோ சட்டத்தின் கீழ் கருதப்படாது” எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ சட்டப்பிரிவையும் ரத்து செய்தது.

மும்பை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை சமீபத்தில் கண்டித்த சுப்ரீம் கோர்ட்டு, 
‘போக்சோ சட்டப்படி, உடலோடு,உடல் தொடர்பு ஏற்பட்டால்தான் நடவடிக்கை என்ற அர்த்தமில்லை . பாலியல் வன்கொடுமைகளை நடக்க காரணமாக இருப்பதே பாலியல் நோக்கம்தான். குழந்தையின் உடலோடு, உடல் உரசுவது அல்ல. 

சட்டத்தின் நோக்கம் என்பது குற்றவாளியை சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிச்செல்வதாக இருக்கக் கூடாது’ என்று கண்டித்திருந்தது.

இந்த நிலையில் 10 வயது சிறுவனை கட்டாயப்படுத்தி  உறவு வைத்துக்கொண்ட குற்றவாளிக்கு போக்சோ சட்டத்தின் கீழ்  போக்சோ சிறப்பு நீதிமன்றம் வழங்கப்பட்ட  சிறை தண்டனையை குறைத்து அலகாபாத் ஐகோர்ட்  வழங்கிய தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.  அதாவது 10 வயது சிறுவனுக்கு 20 ரூபாய் ஆசைகாட்டி, அவருடன் வாய்வழியாக பாலியல் உறவு கொண்டார் என்றும் வெளியே கூறினால் கொடூரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அச்சுறுத்தினார் எனவும் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, ஐபிசி பிரிவு 377, 506, போக்சோ சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த ஜான்சி விசாரணை நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.

இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்டவர் தண்டனையை எதிர்த்து அலகாபாத் ஐகோர்ட்டில்  மேல் முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்கில் அலகாபாத் ஐகோர்ட்  நீதிபதி அனில் குமார் ஓஹா நேற்று தீர்ப்பளித்தார். 

அதில், “போக்சோ சட்டம் பிரிவு 5/6 மற்றும் 9 (எம்) பிரிவில் எந்தவிதமான குற்றத்தையும் குற்றம்சாட்டப்பட்டவர் செய்யவில்லை. ஊடுருவல் பாலியல் கொடுமைதான் வழக்கில் நடந்துள்ளது. 

இந்த வழக்கில் போக்சோ சட்டம் பிரிவு 4-ன் கீழ் மோசமான பாலியல் துன்புறுத்தல் என்பது வராது. ஆதலால் குற்றம்சாட்டப்பட்டவருக்கு வழங்கப்பட்ட 10 ஆண்டுகள் தண்டனையை 7 ஆண்டுகளாகக் குறைக்கிறேன்” எனத் தீர்ப்பளித்தார்.

அலகாபாத் ஐகோர்ட்டின் இந்த  தீர்ப்பு  தற்போது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்