ரோம் நகரில் இருந்து எந்தவொரு விமானமும் இயக்கவில்லை; ஏர் இந்தியா அறிவிப்பு

ரோம் நகரில் இருந்து எந்தவொரு விமானமும் இயக்கவில்லை என்று ஏர் இந்தியா தெரிவித்து உள்ளது.

Update: 2022-01-06 12:35 GMT
அமிர்தசரஸ்,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிவேகத்தில் பரவி வருகிறது. ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகள் விமான போக்குவரத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. இந்தியாவிலும், விமான பயணிகளுக்கு தீவிர பரிசோதனை செய்யப்படுகிறது.

இத்தாலி நாட்டின் ரோம் நகரில் இருந்து விமானம் ஒன்று புறப்பட்டு இந்தியாவின் பஞ்சாப் நகரில் உள்ள அமிர்தசரஸ் நகருக்கு இன்று வந்தடைந்தது.  விமானத்தில் 179 பேர் பயணம் செய்துள்ளனர்.

அந்த விமானம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் வந்திறங்கியதும், அதில் இருந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.  இதன் முடிவில், விமானத்தில் வந்த 125 பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.  அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.  கொரோனா உறுதியான அனைவரின் மாதிரிகளும் ஒமைக்ரான் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.  இது சுகாதார துறையினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், பல்வேறு ஊடகங்கள் ரோமில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி சென்ற ஏர் இந்தியா
விமானத்தில் வந்த 125 பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.

இது தவறானது மற்றும் அடிப்படையற்றது.  ரோம் நகரில் இருந்து எந்தவொரு விமானமும் ஏர் இந்தியாவால் தற்போது இயக்கப்படவில்லை என்று தெரிவித்து உள்ளது.



மேலும் செய்திகள்