கொரோனா பரவல்: முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

Update: 2022-01-13 00:23 GMT
புதுடெல்லி,

ஒமைக்ரான் வைரஸ் தாக்கத்தால் நாட்டில் மூன்றாவது அலை உருவாகி உள்ளது. கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. நாள் ஒன்றுக்கு ஒன்றரை லட்சத்துக்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கையும் தினமும் ஒரு லட்சத்துக்கு மேல் அதிகரித்து வருகிறது.

அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சில மாநிலங்கள் ஊரடங்கை அறிவித்துள்ளன. பெரும்பாலான மாநிலங்கள் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளன. முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் இணை நோய்கள் கொண்ட 60 வயதை கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 15 வயது முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், அனைத்து மாநில முதல் மந்திரிகளுடன் இன்று (வியாழக்கிழமை) காணொலி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

மாலை 4.30 மணிக்கு நடைபெறும்  இந்த ஆலோசனையின் போது  தடுப்பூசி செலுத்தும் வேகம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து  பிரதமர் மோடி விவாதிக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் செய்திகள்