தலித் மணமகன் எங்கள் கிராமத்திற்குள் நுழையக்கூடாது; திருமண ஊர்வலத்தில் கல்வீச்சு! 40 பேர் மீது வழக்குப்பதிவு

தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் சிலர் கற்களை வீசியதைத் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் திருமண ஊர்வலம் நடந்தது.

Update: 2022-05-16 10:34 GMT
போபால்,

மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த  ஒருவரின் திருமண நிகழ்ச்சியில்  சிலர் கற்களை வீசியதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் திருமண ஊர்வலம் நடந்தது.

நேற்று இரவு பிப்லாயா கிராமத்தில் நடந்த சம்பவத்தில், அந்த கிராமத்தைச் சேர்ந்த சில செல்வாக்கு மிக்கவர்கள், பெரும்பாலும் டாங்கி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், திருமண நிகழ்ச்சியின் போது ஊர்வலத்தில் கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது. தலித் மணமகன் தங்கள் கிராமத்திற்கு வருவதை அவர்கள் எதிர்த்தனர். இதன் காரணமாகவே ஆதிக்க சாதியினர் வன்முறையில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இது தொடர்பாக, தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். மேலும், பதன்பூர் கிராமத்தில் இருந்து வந்த மணமகன் வீட்டு திருமணக் கூட்டத்தினரையும் வழியிலேயே சிறிது நேரம் தடுத்து நிறுத்தி, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பின்னர் திருமணம் அமைதியாக நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியின் போது ஊர்வலத்தில் கற்களை வீசியதாக 40 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 5 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்