நீ எனக்காக பூமிக்கு அனுப்பப்பட்டவள் என கூறி 17 வயது சிறுமியை சீரழித்த போலி சாமியார்

நீ எனக்காக பூமிக்கு அனுப்பப்பட்டவள் என கூறி போலீஸ் அதிகாரியின் மகளை கற்பழித்து சீரழித்த போலி சாமியாரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-14 05:40 GMT

மும்பையை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவருக்கு 12 ஆண்டுகளுக்கு முன் வெர்சோவா பகுதியை சோ்ந்த சாப்ட்வேர் நிறுவன மேலாளர் சுரேஷ்குமார் அவஸ்தி (வயது 58) அறிமுகம் ஆனார். சுரேஷ்குமார் அவஸ்தி தன்னை சாமியார் என கூறி வந்தார். மேலும் விடுமுறை நாட்களில் வீட்டில் பூஜை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

சுரேஷ்குமார் அவஸ்தியை போலீஸ் அதிகாரி கண் மூடித்தனமாக நம்பி உள்ளார். போலீஸ் அதிகாரியின் மனைவிக்கு சாமியாரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே கணவரிடம் அவர் சாமியாரை சந்திக்க வேண்டாம் என அறிவுரை கூறியுள்ளார். ஆனால் மனைவியின் பேச்சை காது கொடுத்து அவர் கேட்கவில்லை. மேலும் மனைவியிடம் சண்டை போட்டுவிட்டு சாமியாரின் வீட்டு பூஜைகளுக்கு சென்று வந்து உள்ளார்.

இந்தநிலையில் 2019-ம் ஆண்டு போலீஸ் அதிகாரி அவரது 17 வயது மகள், மகனை சாமியாரின் வீட்டுக்கு பூஜைக்கு தனியாக அனுப்பி உள்ளார். அப்போது சாமியார் பூஜை சாமான் வாங்கி வரச்சொல்லி சிறுவனை வெளியே அனுப்பி உள்ளார். பின்னர் அவர் பிரசாதத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து சிறுமியை கற்பழித்து உள்ளார்.

சிறுமி மயக்கம் தெளிந்த போது, தனக்கு கடவுள்களின் சக்தி இருப்பதாக சாமியார் கூறியுள்ளார். மேலும் "நீ எனக்காக பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டவள்'' என சினிமா வசனங்களை எல்லாம் சிறுமியிடம் கூறியுள்ளார்.

இதேபோல நடந்ததை வெளியே கூறினால் தனக்கு இருக்கும் சக்தியை பயன்படுத்தி உனது குடும்பத்தை அழித்துவிடுவதாகவும் மிரட்டி இருக்கிறார். இதனால் சிறுமி நடந்ததை வெளியே கூறவில்லை. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய சாமியார் கடந்த 3 ஆண்டுகளாக போலீஸ் அதிகாரியின் மகளை சீரழித்து வந்து உள்ளார்.

இந்தநிலையில் சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது சாமியார், போலீஸ் அதிகாரியின் வீட்டுக்கு சென்று உள்ளார். அப்போது பூஜைக்காக தனி அறையில் தன்னுடன் மகளை அனுப்புமாறு போலீஸ் அதிகாரியின் மனைவியிடம் கூறியுள்ளார். இதற்கு அதிகாரியின் மனைவி எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர் போலீஸ் அதிகாரியின் மனைவியை அவதூறாக பேசிவிட்டு அங்கு இருந்து சென்று உள்ளார். இந்தநிலையில் அதிகாரியின் மகள் அவளுக்கு நடந்த அவலம் குறித்து தாயிடம் கூறி கதறி அழுதார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் சம்பவம் குறித்து வெர்சோவா போலீசில் புகார் அளித்தார். புகார் குறித்து கற்பழிப்பு மற்றும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சுரேஷ்குமார் அவஸ்தியை கைது செய்தனர். மேலும் அவர் இதேபாணியில் வேறு எந்த பெண்ணையும் கற்பழித்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுரேஷ்குமார் அவஸ்தியை போன்று போலி சாமியாரிடம் சிக்கி அவஸ்தைப்பட்ட பெண்களின் கதையை கேள்விப்பட்டு இருக்கலாம். ஆனால் போலீஸ் அதிகாரியான சொந்த தந்தையின் கண்மூடித்தனமான நம்பிக்கையால் போலி சாமியாரிடம் சிக்கி 17 வயது சிறுமி சீரழிந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்