ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்த பெண்ணுக்கு உணவு விற்பனை பிரதிநிதி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-03-22 02:25 GMT

பெங்களூரு,

பெங்களூரு எச்.ஏ.எல். போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு பெண் வசித்து வருகிறார். அந்த பெண், ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்திருந்தார். அதன்படி, உணவு விற்பனை பிரதிநிதி, அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்து உணவை கொடுத்தார். அப்போது கழிவறைக்கு செல்ல வேண்டும் என்று அந்த பெண்ணிடம் அவர் கேட்டுள்ளார். இதற்கு அந்த பெண்ணும் சம்மதித்துள்ளார்.

அதன்படி, வீட்டுக்குள் வந்த அவர், பெண்ணிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். அவர் தண்ணீர் கொண்டு வருவதற்கு சமையல் அறைக்குள் சென்றபோது, பின்தொடர்ந்து சென்ற நபர், அந்த பெண்ணின் கையை பிடித்து பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சத்தம் போட்டதால், அந்த நபர் தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து எச்.ஏ.எல். போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது கலபுரகி மாவட்டம் சிஞ்சோலியை சேர்ந்த ஆகாஷ் (வயது 27) என்பது தெரியவந்தது. குந்தனஹள்ளி காலனியில் தனியார் தங்கும் விடுதியில் ஆகாஷ் வசித்து வந்துள்ளார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூருவில் பெண்ணுக்கு உணவு விற்பனை பிரதிநிதி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்