மீண்டும் தொடங்கிய அமர்நாத் யாத்திரை

மோசமான வானிலை காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது.;

Update:2022-07-07 12:57 IST

கோப்புப்படம்

புதுடெல்லி,

பஹல்காமில் உள்ள நுன்வான் மற்றும் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பல்தால் முகாமிலிருந்து பக்தர்கள் அமர்நாத் குகை கோயிலுக்குப் புறப்பட்டுச் செல்வார்கள். அந்த வகையில், இதுவரை சுமார் 65 ஆயிரம் பக்தர்கள் அமர்நாத் குகைக் கோயிலில் பனிலிங்கத்தை தரிசித்துள்ளனர். நேற்று முன் தினம் 6,351 பக்தர்கள் அமர்நாத் கோயிலுக்கு புறப்படத் தயாராக இருந்தனர்.

அமர்நாத் பனிக்குகை நோக்கிய 43 நாட்கள் பயணம், காஷ்மீரில் உள்ள இரு முகாம்களில் இருந்து வியாழக்கிழமை (ஜூன் 30) தொடங்கி, ஆகஸ்ட் 11-ஆம் தேதி முடிவடைகிறது. அமர்நாத் யாத்திரைக்கு 3 லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பக்தர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, அவர்களுடைய பயணத்தைக் கண்காணிக்க, ரேடியோ அலை வரிசை அடையாள முறையை இந்த ஆண்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

முகாம்கள் மற்றும் தங்குமிடங்களில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த இரு ஆண்டுகளாக யாத்திரை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜம்முவில் உள்ள பகவதி நகர் அடிப்படை முகாமில் இருந்து 5,982 யாத்ரீகர்கள் குழு இரண்டு கான்வாய் வாகனங்களின் துணையுடன் பள்ளத்தாக்குக்கு புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் யாத்திரீகர்களில் 3,363 பேர் பஹல்காம் அடிப்படை முகாமுக்கும், 2,619 பேர் பால்டால் அடிப்படை முகாமுக்கும் செல்கின்றனர்" என்று அதிகாரிகள் அறிவித்தனர் .

இந்நிலையில் இன்று காலை வானிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, பக்தர்கள் பகலில் பால்டால் அடிப்படை முகாமில் இருந்து குகை ஆலயத்தை நோக்கி செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்