உ.பி.: அடுத்தடுத்து வாகனங்கள் மோதி தீப்பிடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு
உத்தர பிரதேசத்தின் மதுரா நகரில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிய விபத்தில் 90 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.;
மதுரா,
உத்தர பிரதேசத்தின் மதுரா நகரில் கடந்த 16-ந்தேதி யமுனை விரைவுச்சாலையில் கடும் பனிமூட்டம் ஏற்பட்டு அடுத்தடுத்து வாகனங்கள் மோதி கொண்டன. 8 பஸ்கள் மற்றும் 2 சிறிய வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி தீப்பிடித்தன.
இந்த பயங்கர விபத்தில் 15 பேர் உடல் கருகி பலியானார்கள். 90 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் மேலும் சிலர் உயிரிழந்தனர். அதன் மூலம் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாமல் கருகி விட்டதால், மரபணு பரிசோதனை மூலம் அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
அந்த வகையில் 4 உடல்கள் மட்டுமே இதுவரை அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும், மீதமுள்ளவற்றை அடையாளம் காணும் பணிகள் நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.