80 ஆண்டுகளுக்கு பின்பு... அணுசக்தியில் தனியார் துறையினரும் பங்கு வகிக்கும் ஷாந்தி மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
நாடாளுமன்ற இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ள சூழலில், மசோதாவானது ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்.;
புதுடெல்லி,
நாடாளுமன்ற மேலவையில், இந்திய உருமாற்றத்திற்காக அணுசக்தியை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் பயன்படுத்துதல் மற்றும் நவீனமயமாக்கல் (ஷாந்தி) மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான விவாதத்தில் கலந்து கொண்ட மத்திய அறிவியல் துறை மந்திரி ஜிதேந்திரா சிங் அவையில் பேசும்போது, இந்தியாவின் மொத்த எரிசக்தி தேவையில் 10 சதவீதம் அளவுக்கு அணுசக்தி வழியே பூர்த்தி செய்யப்படுகிறது.
அணுசக்தி துறையில் 2032-ம் ஆண்டுக்குள் 22 ஜிகா வாட்டை எட்ட அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது. 2037-ம் ஆண்டுக்குள் 47 ஜிகா வாட், 2042-ம் ஆண்டுக்குள் 67 ஜிகா வாட் மற்றும் 2047-ம் ஆண்டுக்குள் 100 ஜிகா வாட் இலக்கை அடையவும் திட்டமிடப்பட்டு உள்ளது என கூறினார். இந்த மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறிய நிலையில், மாநிலங்களவையில் இன்று நிறைவேறியுள்ளது.
இந்த மசோதா தாக்கலானபோது எதிர்க்கட்சிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. தேச பாதுகாப்பில் சமரச முயற்சி என கடுமையான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
எனினும், எதிர்ப்புக்கிடையே நாடாளுமன்ற இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ள சூழலில், மசோதாவானது ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் அதற்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில், ஏற்கனவே உள்ள அணுசக்தி சட்டம், 1962 மற்றும் அணுசக்தி பாதிப்புக்கான குடிமக்கள் பொறுப்பு சட்டம் 2010 ஆகிய 2 சட்டங்களுக்கு மாற்றாக இந்த புதிய சட்டம் அமையும்.
இதன்படி, அணுசக்தியில் தனியார் துறையினரும் பங்கு வகிப்பதற்கான ஒப்புதலை இந்த மசோதா வழங்குகிறது. 80 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த மசோதா இரு அவைகளிலும் இன்று நிறைவேறியுள்ளது.