பா.ஜனதா தீண்டத்தகாத கட்சி அல்ல: ஆயரின் கருத்தால் கேரள அரசியலில் பரபரப்பு

பா.ஜனதா கட்சி ஒன்றும் தீண்டத்தகாத கட்சி அல்ல என்ற ஆயரின் கருத்தால் கேரள அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.;

Update:2023-04-14 07:33 IST

திருவனந்தபுரம், 

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையில் இடதுசாரி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக பினராயி விஜயன் இருந்து வருகிறார். கேரளாவில் பா.ஜனதா கட்சிக்கு எம்.எல்.ஏ.க்களோ, எம்.பி.க்களோ இல்லை. ஆனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் கணக்கை தொடங்க பா.ஜனதா கட்சி தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சமீபத்தில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, கேரளாவில் பா.ஜனதா விரைவில் ஆட்சி அமைக்கும் என்று கூறினார்.

அதற்கேற்ப கேரளாவில் உள்ள பா.ஜனதா கட்சியினர் அங்கு பெரும்பான்மையான கிறிஸ்தவர்களின் வாக்கு வங்கியை குறிவைத்து இப்போதே தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். அதன்படி கடந்த ஈஸ்டர் பண்டிகையின்போது அவர்கள் கிறிஸ்தவர்களின் வீடுகளுக்கு சென்று வாழ்த்து தெரிவித்தனர். மேலும், ஆயர்கள், பாதிரியார்களையும் சந்தித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

பா.ஜனதாவின் செயல்பாடுகளை தற்போது கிறிஸ்தவ ஆயர்கள் பாராட்டி வருகிறார்கள். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ரப்பருக்கு உரிய விலை கொடுத்தால் கேரளாவில் பா.ஜனதா கட்சிக்கு ஒரு எம்.பி. பதவி கிடைக்கும் என்று கத்தோலிக்க பேராயர் ஒருவர் அண்மையில் கூறி இருந்தார்.

இந்தநிலையில் தற்போது ஆர்த்தோடக்ஸ் தேவாலய ஆயர் கீவர்க்கீஸ், பா.ஜனதா கட்சியின் செயல்பாடுகளை பாராட்டி கருத்து பதிவிட்டுள்ளார். அதில் இந்தியாவில் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று சர்வதேச அளவில் சிலர் தேவையற்ற பிரசாரங்களை மேற்கொள்கிறார்கள். இது இந்தியாவை அவமதிப்பது போல் உள்ளது. இந்தியா மிகப்பெரிய நாடு. ஆங்காங்கே மனக்கசப்பை ஏற்படுத்தும் சில சம்பவங்கள் நடைபெறலாம். அதனை சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டும் எனக்கூறியிருந்தார்.

இதுபோல ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்பாட்டையும் ஆயர் கீவர்க்கீஸ் பாராட்டி உள்ளார். ஆர்.எஸ்.எஸ்.சில் பல நல்ல விசயங்கள் உள்ளன. உடற்பயிற்சி என்பது தற்காப்புக்காக மேற்கொள்வது ஆகும். மேலும், பா.ஜனதா கட்சி ஒன்றும் தீண்டத்தகாத கட்சி அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் கேரளாவில் கத்தோலிக்க ஆயர்கள் பா.ஜனதா கட்சிக்கு அடுத்தடுத்து பாராட்டு தெரிவித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் கேரளாவில் பா.ஜனதா கட்சிக்கு கிறிஸ்தவர்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது, அதனை நிராகரித்துவிட முடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கேரள மாநில செயலாளர் கோவிந்தன் மாஸ்டர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்