அமலாக்கத்துறை விளக்கம் அளிக்க நோட்டீசு
டி.கே.சிவகுமார் தொடர்ந்த வழக்கில் அமலாகத்துறை விளக்கம் அளிக்கும்படி டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது..;
பெங்களூரு:
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் டி.கே.சிவக்குமார். இவருக்கு சொந்தமான டெல்லியில் உள்ள குடியிருப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரித்துறை நடத்திய சோதனையில் ரூ.8.59 கோடி சிக்கி இருந்தது. பின்னர் பணம் சிக்கியது குறித்து டி.கே.சிவக்குமார் மீது அமலாக்கத்துறையினர் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி வழக்குப்பதிவு செய்தது. கோர்ட்டிலும் டி.கே.சிவக்குமாருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில், தனது வீட்டில் நடந்த சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை மறு விசாரணை நடத்துவதாகவும், இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியும் டெல்லி ஐகோர்ட்டில் டி.கே.சிவக்குமார் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதிகள் 2 பேர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் நோட்டீசு அனுப்பி உத்தரவிட்டுள்ளார். இதற்காக அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந் தேதி அமலாக்கத்துறைக்கு காலஅவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை டிசம்பர் 15-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.