தண்டவாளத்தில் ஆட்டோவை நிறுத்திய டிரைவர்; வந்தே பாரத் ரயில் மோதியதால் பயணிகள் அதிர்ச்சி
ரயிலின் முன்பகுதியில் ஆட்டோ முழுமையாக சிக்கிக் கொண்டதால், ரயிலை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.;
திருவனந்தபுரம்,
கேரள மாநிலத்தில் காசர்கோடு–திருவனந்தபுரம், மங்களூரு–திருவனந்தபுரம் வழித்தடங்களில் “வந்தே பாரத்” ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த இரு ரயில்களுக்கும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. இதனால் திருவனந்தபுரத்திலிருந்து பெங்களூரு மற்றும் மதுரைக்கு “ஸ்லீப்பர் வந்தே பாரத்” மற்றும் “நமோ பாரத்” ரயில்களையும் இயக்கும் திட்டம் உள்ளது. இந்த நிலையில், காசர்கோட்டிலிருந்து திருவனந்தபுரத்திற்கு நேற்று இரவு சென்ற வந்தே பாரத் ரயில், ஒரு ஆட்டோ மீது மோதியது. வர்க்கலா அருகே வந்தே பாரத் ரயில் வந்து கொண்டிருந்தபோது, தண்டவாள பகுதியில் ஒரு ஆட்டோ நிற்பதை ரயிலின் லோகோ பைலட் பார்த்தார்.
ரயில் அதிவேகமாக வந்ததால், அதன் வேகத்தை அவர் அதிரடியாக குறைத்தார். இருந்தபோதிலும் அந்த ஆட்டோ மீது வந்தே பாரத் ரயில் பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோ சுக்குநூறாக நொறுங்கியது. ரயில் மோதிய வேகத்தில் ஆட்டோவில் இருந்த டிரைவரான சிபி (வயது 28) வெளியே தூக்கி வீசப்பட்டார். இதில் லேசான காயமடைந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
ரயிலின் முன்பகுதியில் ஆட்டோ முழுமையாக சிக்கிக் கொண்டதால், ரயிலை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு ரயில்வே ஊழியர்கள், போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தண்டவாள பகுதியில் இருந்து ஆட்டோ அகற்றப்பட்டதையடுத்து, வந்தே பாரத் ரயில் சம்பவ இடத்திலிருந்து சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். ரயில் தண்டவாள பகுதிக்கு ஆட்டோ எப்படி வந்தது? அதனை ஓட்டி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஆட்டோவை ஓட்டி வந்தவர் சிபி (வயது 28) என்பது தெரியவந்தது. தப்பி ஓடிய அவரை ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் தேடிக் கண்டுபிடித்து கைது செய்தனர். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
ஆட்டோ டிரைவர் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் ஆட்டோவுடன் நின்றதாகவும், அங்கிருந்து தண்டவாள பகுதிக்கு திடீரென ஆட்டோ சென்றுவிட்டதாகவும் சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். ஆட்டோ டிரைவர் சிபி குடிபோதையில் இருந்ததால் இவ்வாறு நடந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இது தொடர்பாக அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.