2 நாள் தங்கினேன்; சுவாச தொற்று ஏற்பட்டு விட்டது: டெல்லி நிலைமை பற்றி மத்திய மந்திரி வருத்தம்

சுற்றுச்சூழலுக்கு ஏற்ற தொழில் நுட்பங்களை ஏற்க மக்கள் தயாராக இல்லை என மத்திய மந்திரி கட்காரி வருத்தம் தெரிவித்து பேசினார்.;

Update:2025-12-25 08:57 IST

புதுடெல்லி,

டெல்லியில் காற்று மாசு டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்தபடி காணப்படுகிறது. தொடர்ந்து சில வாரங்களாக அதிகரித்து வரும் காற்று மாசால் மக்கள் சுவாச பாதிப்புக்கு இலக்காகி உள்ளனர்.

இந்த நிலையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்காரியும் இதன் பாதிப்புக்கு ஆளாகி உள்ளார். டெல்லியில் மூத்த பத்திரிகையாளர் ஒருவரின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, டெல்லியில் நான் 2 நாட்கள் தங்கியிருந்தேன். அதற்குள் சுவாச தொற்று ஏற்பட்டு விட்டது. டெல்லி ஏன் இவ்வளவு காற்று மாசால் சிக்கி தவிக்கிறது? என கேட்டுள்ளார்.

நான் போக்குவரத்து துறை மந்திரியாக இருக்கிறேன். 40 சதவீத காற்று மாசு புதைபடிவ எரிபொருளால் ஏற்படுகிறது. இந்த எரிபொருளை இறக்குமதி செய்ய ரூ.22 லட்சம் கோடியை செலவு செய்கிறோம். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற தொழில் நுட்பங்களை ஏற்க மக்கள் தயாராக இல்லை என வருத்தம் தெரிவித்து பேசினார்.

டெல்லியில் பா.ஜ.க. ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், காற்று மாசு தர குறியீடு பல்வேறு பகுதிகளிலும் மிக மோசம் என்ற அளவில் பதிவாகி மக்களை அவதிக்குள்ளாக்கி இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்