மும்பை மாநகராட்சி தேர்தலில் கூட்டணி; உத்தவ் தாக்கரே, ராஜ்தாக்கரே அறிவிப்பு

மண்ணின் மைந்தர் கொள்கையை கடைப்பிடித்து வரும் இரு கட்சிகளும் கூட்டணி வைத்து போட்டியிடுவதாக அறிவித்து இருப்பது மராட்டிய அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது;

Update:2025-12-25 02:40 IST

மும்பை,

மராட்டியத்தில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு பிறகு பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதில் குறிப்பாக 20 ஆண்டுகள் பகையை மறந்து உத்தவ் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கைகோர்த்த சம்பவம் ஆகும்.

சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேயின் மகன் உத்தவ் தாக்கரே. பால்தாக்கரேயின் அண்ணன் மகன் ராஜ்தாக்கரே. சிவசேனாவில் உத்தவ் தாக்கரேக்கு பால்தாக்கரே முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியதால், கடந்த 2005-ம் ஆண்டு சிவசேனாவில் இருந்து ராஜ்தாக்கரே விலகினார். அது முதல் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ்தாக்கரே இருவரும் அரசியலில் பகைவர்களாக மாறினர்.

ஆனால் திடீர் திருப்பமாக அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் அரசியலில் கைகோர்த்தனர். இந்த நிலையில் அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந் தேதி நடைபெற உள்ள மும்பை மாநகராட்சி தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட இருப்பதாக அந்த இரு கட்சிகளின் தலைவர்களும் நேற்று கூட்டாக தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்கள் நிருபர்களை சந்தித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.

மண்ணின் மைந்தர் கொள்கையை கடைப்பிடித்து வரும் இரு கட்சிகளும் கூட்டணி வைத்து போட்டியிடுவதாக அறிவித்து இருப்பது மராட்டிய அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரத்தில் தாக்கரே சகோதரர்களின் கூட்டணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்