காஷ்மீரில் 2 என்கவுண்ட்டர்களில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் 2 என்கவுண்ட்டர்களில் 4 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.;

Update:2022-10-06 01:29 IST

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதையடுத்து அந்த மாவட்டத்தின் டிராச் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு சுற்றிவளைத்து தேடும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். அதேபோல அம்மாவட்டத்தின் மூலு கிராமத்திலும் நேற்று அதிகாலை தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.

அப்போது மூண்ட துப்பாக்கிச்சண்டையில், டிராச் கிராமத்தில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த உள்ளூர் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மூலு கிராமத்தில் நடந்த என்கவுண்ட்டரில் லஷ்கர்-இ-தொய்பாவை சேர்ந்த ஒரு உள்ளூர் பயங்கரவாதி பலியானார்.

கொல்லப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளில் 2 பேர், கடந்த 2-ந்தேதி ஒரு போலீஸ் அதிகாரியும், கடந்த ஆகஸ்டு மாதம் ஒரு மேற்கு வங்காள தொழிலாளியும் கொல்லப்பட்டதில் தொடர்புடையவர்கள் என போலீசார் தெரிவித்தனர். குறிப்பிட்ட பகுதிகளில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெறுவதாகவும் அவர்கள் கூறினர்.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 3 நாள் பயணமாக காஷ்மீர் சென்றுள்ள நிலையில் இந்த என்கவுண்ட்டர்கள் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்