’முருங்கை சாறு, பாதாம் அல்வா’ ஜனாதிபதி மாளிகையில் புதினுக்கு அளிக்கப்பட்ட விருந்தின் மெனு கார்டு வைரல்

ரஷ்ய அதிபர் புதினுக்கு அளிக்கப்பட்ட இரவு விருந்து மெனு கார்டு வைரலாகியுள்ளது. அதில், தென்னிந்திய உணவான `முருங்கை இலை சாறு’ முதலிடம் பிடித்துள்ளது;

Update:2025-12-06 15:33 IST

புதுடெல்லி,

இந்தியா - ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று முன்தினம் புதுடெல்லி வந்தார். பிரதமர் மோடி அவரை விமான நிலையத்துக்கே சென்று வரவேற்றார். இதையடுத்து, பிரதமர் மோடியும் அதிபர் புடினும் நேற்று முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்தியா வந்த புதினுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று இரவு விருந்தளித்தார். இந்த விருந்தில், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், வெளியுறவுத்துறை உயர் அதிகாரிகள், ரஷ்ய தூதுக்குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விருந்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் வெளியுறவுத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவருமான சசி தரூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அவரும் இதில் கலந்து கொண்டார். இதற்கிடையே புதினுக்கு அளிக்கப்பட்ட விருந்தில் இடம் பெற்ற உணவுகளின் விவரம் அடங்கிய மெனு கார்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முருங்கை இலை சாறு, தென்னிந்திய ரசம், காஷ்மீரி வால்நட்டால் செய்யப்பட்ட குச்சி டூன் செடின், பான்-கிரில் செய்யப்பட்ட கருப்பு பயறு கபாப்ஸான காலே சேன் கே ஷிகாம்பூரி, காரமான சட்னியுடன் கூ டிய காய்கறி ஜோல் மோமோ என காஷ்மிர் முதல் தென்னிந்தியா வரையிலான உணவுகள் முதலில் பரிமாரப்பட்டிருக்கின்றன. பாதாம் அல்வா கேசர்-பிஸ்தா குல்ஃபி, புதிய பழங்கள், குர் சந்தேஷ், முரக்கு போன்ற பாரம்பரிய உணவுகளுடன், பல்வேறு ஊறுகாய்கள் மற்றும் சாலடுகள் உள்ளிட்டவைகளுடன் மாதுளை, ஆரஞ்சு, கேரட் மற்றும் இஞ்சி சாறுகள் அடங்கிய ஜூஸ்கள் சாப்பிட்டு முடித்தவுடன் பரிமாரப்பட்டிருக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்