டுவிட்டர் வழக்கில் விசாரணையை ஒத்திவைக்க காலஅவகாசம்: மத்திய அரசு மீது, கர்நாடக ஐகோர்ட்டு அதிருப்தி

டுவிட்டர் வழக்கில், விசாரணையை ஒத்திவைக்க காலஅவகாசம் கேட்டதால் மத்திய அரசு மீது கர்நாடக ஐகோர்ட்டு அதிருப்தி அடைந்து உள்ளது.

Update: 2023-01-10 20:51 GMT

பெங்களூரு:

39 கணக்குகள் முடக்கம்

சர்ச்சைக்கு உரிய 39 டுவிட்டர் கணக்குகளை முடக்கும்படி, டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய தகவல் தொழில்நுட்ப துறை உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் டுவிட்டர் நிறுவனம் மனு தாக்கல் செய்து இருந்தது. அந்த மனு மீதான விசாரணை கடந்த ஆண்டு (2022) அக்டோபர் மாதம் நடந்தது. அப்போது டுவிட்டர் சார்பில் ஆஜரான வக்கீல், 39 கணக்குகளை முடக்க கூறுவதற்கான சரியான காரணத்தை மத்திய அரசு கூற வேண்டும்.

இல்லாவிட்டால் அது கருத்து சுதந்திரத்தை மீறும் செயல் என்று வாதிட்டார். மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீல் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க காலஅவகாசம் கேட்டார். இதனால் வழக்கு விசாரணை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ந் தேதியும், டிசம்பர் மாதம் 12-ந் தேதியும் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

எத்தனை முறை ஒத்திவைப்பது?

இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணை நீதிபதி கிருஷ்ணா தீக்ஷித் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான வக்கீல், வழக்கு விசாரணை இந்த மாதம் 27-ந் தேதி அல்லது அடுத்த மாதம் (பிப்ரவரி) 3-ந் தேதிக்கு ஒத்திவைக்குமாறு கேட்டு கொண்டார்.

ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதி மத்திய அரசு மீது அதிருப்தி அடைந்தார். ''அரசு கூறுவதை கேட்டு நாங்கள் செயல்பட முடியாது''. ''எத்தனை முறை தான் மனு மீதான விசாரணையை ஒத்திவைப்பது?'' என்று கேட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை வருகிற 18-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்