குமாரசாமிக்கு எதிராக நடிகை ரம்யா போட்டி?
கா்நாடக சட்டசபை தேர்தலில் சன்னபட்டணா தொகுதியில் குமாரசாமிக்கு எதிராக நடிகை ரம்யா, காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.;
பெங்களூரு:-
முதல்கட்ட வேட்பாளர்
கர்நாடக சட்டசபைக்கு இன்னும் ஓரிரு மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. மார்ச் மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் யாத்திரைகளை மேற்கொண்டுள்ளனர். இதன் மூலம் மக்களை ஈர்க்க அவர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
ஜனதா தளம்(எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கு முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டுவிட்டது. இதில் ராமநகர் மாவட்டம் சன்னபட்டணா தொகுதியில் குமாரசாமி போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி, 150 தொகுதிகளுக்கு வேட்பாளர்களின் பெயர்களை இறுதி செய்துள்ளது. முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் மேலிடத்திற்கு கர்நாடக காங்கிரஸ் அனுப்பி வைத்துள்ளது.
நடிகை ரம்யா
இதில் சன்னபட்டணா தொகுதியில் குமாரசாமிக்கு எதிராக நடிகை ரம்யாவை நிறுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமாக பெண் வாக்காளர்களை கவர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஆலோசனையில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. குமாரசாமியை போல் ரம்யாவும் ஒக்கலிகர் சமூகத்தை சேர்ந்தவர். அவர் ஏற்கனவே மண்டியா நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு ஜனதா தளம் (எஸ்) கட்சியை வீழ்த்தி 6 மாதங்கள் எம்.பி.யாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு நடிகை ரம்யா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இருந்தார்.
கட்சி பணிகளில் அவர் பங்கேற்காமல் உள்ளார். சமீபத்தில் கர்நாடகத்தில் நடைபெற்ற ராகுல் காந்தியின் ஒற்றுமை பாதயாத்திரையில் நடிகை ரம்யா கலந்து கொண்டார். அவர் கட்சி பணிகளில் இருந்து சற்று விலகி இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் காங்கிரசுக்கு ஆதரவாகவும், பா.ஜனதாவுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியலில் இருந்து சற்று ஒதுங்கிய நிலையில் அவர் கன்னட திரைத்துறை மீது கவனம் செலுத்தி வருகிறார். தயாரிப்பு பணிகளுடன் நடிப்பிலும் ஆர்வம் காட்டியுள்ளார்.