சிவமொக்கா மாவட்டத்தில் காட்டுயானைகளின் எண்ணிக்கை 127 ஆக அதிகரிப்பு

சிவமொக்கா மாவட்டத்தில் காட்டுயானைகளின் எண்ணிக்கை 127 ஆக அதிகரித்து இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Update: 2023-08-11 18:45 GMT

சிவமொக்கா-

சிவமொக்கா மாவட்டத்தில் காட்டுயானைகளின் எண்ணிக்கை 127 ஆக அதிகரித்து இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

யானைகள் கணக்கெடுப்பு பணி

கர்நாடகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனப்பகுதியில் உள்ள யானைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. அதுபோல் சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் வசிக்கும் யானைகளையும் கணக்கெடுக்கும் பணி நடந்தது. இதில் பெங்களூரு பன்னரகட்டா வன உயிரியல் பூங்கா ஊழியர்கள், சிவமொக்கா மாவட்ட வனத்துறை ஊழியர்கள் ஆகியோர் பல்வேறு குழுக்களாக பிரிந்து யானைகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மாவட்டத்தில் செட்டிஹள்ளி, மலேசங்கரா, ஆயனூர், மூக்குத்தி வனப்பகுதி உள்பட ஏராளமான வனப்பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் யானைகளின் கணக்கெடுப்பு பணி முடிந்து நேற்று மாவட்ட வனத்துறையினரால் அறிக்கை வெளியிடப்பட்டது.

சிவமொக்காவுக்கு 6-வது இடம்

அதில் சிவமொக்கா மாவட்டத்தில் மொத்தம் 127 யானைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கு முன்பு யானைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததாகவும், தற்போது அதிகரித்து இருப்பதாகவும் வனத்துறையினர் கூறினர். மேலும் இந்த கணக்கெடுப்பில் சக்கரேபைலு யானைகள் முகாமில் உள்ள யானைகளும், வனப்பகுதியில் சிறை வைக்கப்பட்டு உள்ள யானைகளும் கணக்கில் அடங்காது என வனத்துறை அதிகாரி பிரசன்ன கிருஷ்ணா பட்டாக்கார் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் மாநிலத்தில் காட்டுயானைகள் அதிகம் வசிக்கும் வனப்பகுதியில் சிவமொக்கா மாவட்டம் 6-வது இடத்தை பிடித்து இருப்பதாகவும் அவர் கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்