கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியை அடியோடு ஒழிக்க வேண்டும்; முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை ஆவேசம்
சித்தராமையா ஆட்சியில் தான் ஊழல் நடந்தது என்றும், எனவே கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றும் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை ஆவேசமாக கூறியுள்ளார்.;
பெங்களூரு:
பசவராஜ்பொம்மை பதிலடி
கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை ஆட்சியில் 40 சதவீத கமிஷன் வாங்கியதாகவும், அவரது தலைமையிலான ஆட்சி ஊழல் நிறைந்தது என்றும் நேற்று முன்தினம் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை நேற்று பெங்களூரு எலகங்கா பகுதியில் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து தெருமுனை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் கட்சி மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தேர்தல் பிரசாரத்தின் போது பசவராஜ் பொம்மை கூறியதாவது:-
சித்தராமையா ஆட்சியில் ஊழல்
சித்தராமையா ஆட்சியில் தான் கர்நாடகத்தில் ஆசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு, வினாத்தாள் கசிவு, மறுசீரமைப்பு பணிகளிலும் ஊழல்கள் நடந்தன. அதுபோல் ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான 843 ஏக்கர் விவசாய நிலம் சட்டவிரோதமாக வழங்கப்பட்டது. கர்நாடகத்தில் இதுவரை யார் ஊழல் செய்திருக்கிறார்கள் என்று பார்த்தால், அது சி்த்தராமையாவும், அவரது தலைமையிலான அரசும் தான்.
மேலும் காங்கிரஸ் ஆட்சி தான் பெங்களூருவில் பி.டி.ஏ. மூலம் கொள்ளையடித்தனர். காங்கிரஸ் கட்சி என்றாலே அநீதி, ஊழல், அக்கிரமம் தான். இந்த தீய காங்கிரஸ் கட்சியை கர்நாடக மக்கள் தொலைவில் வைக்க வேண்டும். மாநிலத்தில் இந்த தேர்தலுடன் காங்கிரஸ் கட்சியை அடியோடு ஒழிக்க வேண்டும். மண்ணில் இருந்து காங்கிரஸ் என்ற பெயரை முழுமையாக நீக்க வேண்டும்.
ஊறுகாய் செய்ய தான் உதவும்
தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று உத்தரவாத அட்டை வழங்கி வருகிறார்கள். அதற்கு உயிர் இல்லை. அதை எடுத்து ஊறுகாய் செய்ய தான் உதவும். தேர்தல் வரை உத்தரவாதம் தருவார்கள். அதன் பிறகு அதை கிடப்பில்போட்டு விடுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.