நாய்க்கடி சம்பவத்திற்கு உணவு வைப்போர் தான் பொறுப்பு- சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கை
உணவிட வேண்டுமென்றால், நாய்களை உங்கள் வீட்டிற்கு அழைத்து கொண்டு போய் உணவளியுங்கள் என நீதிபதி கூறியுள்ளார்.;
புதுடெல்லி,
இந்தியாவில் நாய்க்கடி பிரச்சினை பெரிய விஷயமாக மாறியிருக்கும் நிலையில், இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினரும் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதிகள் சில காட்டமான கருத்துகளைத் தெரிவித்தனர்.
நாய்க்கடி விவகாரங்களைத் தடுக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுப்பதில்லை. நாய்க்கடிகளால் குழந்தைகள் அல்லது முதியவர்களுக்கு ஏற்படும் ஒவ்வொரு மரணம் அல்லது காயத்திற்கும், மிகப் பெரிய தொகையை இழப்பீடு நிர்ணயிப்போம். மேலும், தெருநாய்களுக்கு உணவளிப்பவர்களே நாய்க்கடி சம்பவங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும். உணவிட வேண்டுமென்றால், நாய்களை உங்கள் வீட்டிற்கு அழைத்து கொண்டு போய் உணவளியுங்கள்.
மாநிலங்களின் கருத்துகளைக் கேட்க நாங்கள் அரை நாள் செலவிட வேண்டும். நாய்க்கடி பிரச்சினையைச் சமாளிக்க அவர்களிடம் எதாவது செயல் திட்டம் உள்ளதா இல்லையா என்று பார்க்க வேண்டும். நாங்கள் சட்டப்பூர்வ விதியை அமல்படுத்துவதை மட்டுமே விரும்புகிறோம். இது தொடர்பான விசாரணையை ஜனவரி 20ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.